தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு தேர்தல் எப்போது?

தினமலர்  தினமலர்
தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு தேர்தல் எப்போது?

சென்னை; 'தி.மு.க., பொருளாளர் பதவியில், துரைமுருகன் நீடிப்பார்' என, அக்கட்சியின் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். இதனால், துரைமுருகன் எதிர்பார்த்த பொதுச்செயலர் பதவி, அவருக்கு கிடைக்குமா; கிடைக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தி.மு.க., பொதுச்செயலராக இருந்த, அன்பழகன், மார்ச், 7ல், உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். அன்பழகன் மறைவுக்கு பின், அவர் வகித்த பதவி, பொருளாளர்துரைமுருகனுக்கு வழங்கப்பட இருந்தது.அதனால், தான் வகித்த பொருளாளர் பதவியை, துரைமுருகன் ராஜினாமா செய்தார். தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், துரைமுருகனை பொதுச்செயலராக தேர்வு செய்ய, கட்சி தலைமை திட்டமிட்டிருந்தது.ஆனால், பொதுக்குழு கூடுவதற்கு முன், கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அது நீடிக்கிறது.தற்போதைய சூழலில், பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாத காரணத்தால், பொதுச்செயலர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை.மேலும், பொதுச்செயலர் பதவிக்கு, டி.ஆர்.பாலு, கனிமொழி, நேரு, பெரியசாமி, வேலு மற்றும் பொன்முடி ஆகியோர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. தற்போது, பொதுச்செயலரின் அதிகாரம், தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உட்கட்சி தேர்தல் பணிகளும் நடந்து வருகின்றன. எனவே, இந்த தருணத்தில், பொதுச்செயலர் தேர்தலில் கவனம் செலுத்தினால், சட்டசபை பொதுத்தேர்தல் பணிகள் பாதிக்கும் என்பதால், சட்டசபை தேர்தல் முடிந்த பின், பொதுச் செயலர் தேர்வு நடத்தலாம் என, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது.அதனால், துரைமுருகனின் ராஜினாமா நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு, பொருளாளர் பதவியில், அவர் தொடர அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, ஸ்டாலின் அறிக்கை:கொடிய நோயான கொரோனா அச்சுறுத்தும் நேரத்தில், தி.மு.க., சட்டவிதி, 17ஐ பயன்படுத்தி, பொதுக்குழுவை கூட்டி, பொதுச்செயலர், பொருளாளர் பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய முடியாத, அசாதாரண சூழ்நிலை உள்ளது. இதை கருத்தில் வைத்து, பொதுக்குழு கூடும் வரையில், தி.மு.க., சட்டவிதி, 18ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி, துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் பெயரில், நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அவரே பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என, அறிவிக்கிறேன்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொருளாளர் பதவியில் துரைமுருகன் தொடர்வார் என, கட்சி தலைமை அறிவித்துள்ளதால், அவர் எதிர்பார்த்த, பொதுச் செயலர் பதவி கிடைக்குமா, கிடைக்காதா என்ற கேள்வி, கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

மூலக்கதை