லடாக் எல்லையில் பதற்றம்: 6ல் இந்தியா - சீனா பேச்சு

தினமலர்  தினமலர்
லடாக் எல்லையில் பதற்றம்: 6ல் இந்தியா  சீனா பேச்சு

புதுடில்லி:இந்தியா - சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க, இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள், நாளை மறுநாள் சந்தித்து பேச உள்ளனர்.
லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது.இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தணிக்க, பிராந்திய ராணுவ கமாண்டர்கள் தலைமையில், பலமுறை நடத்திய பேச்சு பலனளிக்கவில்லை.

இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று, ராணுவ உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்த, சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது.அதன்படி, நாளை மறுநாள், இந்திய ராணுவத்தின், 14வது படைப் பிரிவின், லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழு, சீன ராணுவ உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்த உள்ளது. லடாக்கில், இந்திய எல்லையில், சுஷுல் - மோல்டோ பகுதியில் இந்த பேச்சு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சில் சுமுக தீர்வு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த, 2017ல், பூடான் எல்லையோரம், டோக்லாம் பகுதியில், சீன ராணுவத்தின் அத்துமீறல் காரணமாக ஏற்பட்ட பதற்றம், மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்தது குறிப்பிடத்தக்கது.பாக்., துறைமுக பணிகள் தீவிரம்ஒரு புறம் இந்திய எல்லையில், ராணுவத்தை குவித்து பதற்றத்தை ஏற்படுத்தி வரும் சீனா, மறுபுறம், பாகிஸ்தானில், கவடார் துறைமுக பகுதியில் தன் கடற்படை தளத்தை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவது, செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சீனா - பாக்., பொருளாதார வழித்தடத்திட்டத்தில், கவடார் துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறைமுகத்தை நவீனப்படுத்தி, அங்கு, தன் கடற்படை தளத்தை அமைக்கவும், இந்திய பெருங்கடல் பகுதியில், தன் ஆதிக்கத்தை அதிகரிக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை