கொரோனா வீரியம் குறைந்தது: 'எய்ம்ஸ்' இயக்குனர் தகவல்

தினமலர்  தினமலர்
கொரோனா வீரியம் குறைந்தது: எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

புதுடில்லி: ''கொரோனா வைரஸ் பரவலின் வீரியம் குறைந்துள்ளது,'' என, டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துஉள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:தீவிர கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் வந்த நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்ததில், நோய் பரவலின் வீரியம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், 80 சதவீதம் பேர், 12 - 13 நகரங்களில் வசிக்கின்றனர்.

இப்பகுதிகளில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தி விட்டால், அடுத்த, 2 - 3 வாரங்களில், நோய் உச்சத்தை தொட்டு, பின் சரியத் துவங்கி விடும்.இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு, பி.சி.ஜி., எனப்படும், காசநோய் தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளதால், இயற்கையாகவே அதிக நோய் எதிர்ப்பு ஆற்றல் உடையவர்களாக உள்ளனர்.கொரோனா பலி குறைவாக உள்ளதற்கு இதுவும் ஒரு காரணம். அவசர சிகிச்சை பிரிவில், நோயாளிகள் குறைவாகவே உள்ளனர். அதுபோல, 'வென்டிலேட்டர்' எனப்படும் செயற்கை சுவாச கருவிகளுடன் உள்ளோர் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.

'ரெம்டிசிவிர்' மருந்து, நோய் குணமாகும் காலத்தை குறைக்குமே தவிர, தீவிர நோய் உள்ளவர்களின் மரணத்தை தடுக்க துணை புரியாது. அதுபோல, லேசான அறிகுறி உள்ளோருக்கு, 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' மருந்து ஓரளவு பலனளிக்கிறது.இந்தியாவில், கொரோனா இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை. அதனால், 'ஹாட்ஸ்பாட்' எனப்படும் பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை