மாறவில்லை! கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில்...இன்னும் இடம்பெறாத மதுரை

தினமலர்  தினமலர்
மாறவில்லை! கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில்...இன்னும் இடம்பெறாத மதுரை

கொரோனா இல்லாத மாவட்டமாக மதுரை இன்னும் மாறவில்லை. இருப்பினும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.

கடைகளில் விற்பனை களை கட்டத் துவங்கிவிட்டது. சிக்னல்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று செல்கின்றன. மதுரை மீண்டும் பழையபடி நெரிசல் நகராக மாறிக் கொண்டிருக்கிறது.இந்த நெரிசல் தான் கொரோனாவிற்கு மிகவும் பிடித்தமானது. வெளியில் செல்வோரில் ஒரு பகுதி யினர் மாஸ்க் அணிவதில்லை. சிலர் மாஸ்க்கை கழற்றிவிட்டு தும்முகின்றனர். இக்கட்டான இக்காலத்தில் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது என சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரியா ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் மேலும்கூறியதாவது: கடைகளுக்கு செல்லும் போது கண்டிப்பாக ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பை, கூடை கைப்பிடியில் சானிடைசர் தெளிக்கலாம். வீடு சேர்ந்ததும் கைகளை நன்றாக சோப்பு பயன்படுத்தி 20 வினாடிகள் கழுவ வேண்டும். இதுவரை உணவு அல்லது உணவு பாக்கெட் மூலம் கொரோனா பரவியதாக உறுதியான தகவல் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி பெறகாய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது முக்கியம். அதையும் நன்றாக சுத்தப்படுத்திய பிறகே சாப்பிட வேண்டும்.

அணியும் முன்பு மாஸ்க்கில் ஓட்டை, கிழிசல் இருக்கக்கூடாது. மூக்கு, வாய்ப்பகுதி மூடப்பட்டிருக்க வேண்டும். அணிந்த பிறகு மாஸ்க்கை தொடவே கூடாது. ஒரு முறை பயன்படுத்தும் மாஸ்க் என்றால், வீடு திரும்பியதும் தனி பையில் போட்டு குப்பை தொட்டியில் போட வேண்டும். துணி மாஸ்க் என்றால் சோப்பு நீரில் போட்டு துவைக்க வேண்டும். ஒருவர் 4 மாஸ்க் வரை வைத்துக்கொண்டு சுழற்சி முறையில் பயன்படுத்துவது நல்லது. சர்ஜிக்கல், என்.95 மாஸ்க்கிற்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடு நீடிப்பதால் சுகாதார பணியில் ஈடுபடுபவர்கள் தவிர மற்றவர்கள் இதை தவிர்க்கலாம், என்றார்.

2,624 பேருக்கு அபராதம் : மாஸ்க் அணியாமல் வெளியில் செல்வது நமக்கும், பிறருக்கும் நல்லதல்ல என்பது தெரிந்தும் அலட்சியம் காட்டுவோருக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை அபராதம் விதித்து வருகிறது. கடந்த 10 நாளில் 2,624 பேருக்கு தலா ரூ. 100 வீதம் ரூ.2.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.4 பேருக்கு கொரோனாகே.புதுார் 53 வயது ஆண் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதியானது. அவரது 50 வயது மனைவி, 25 வயது மகளுக்கும் தொற்று உறுதியானது. தவிர கிருஷ்ணாபுரம் காலனி 29 வயது நபர், எஸ்.எஸ்.காலனி 25 வயது பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் வெளிமாநிலத்தில் இருந்து விமானத்தில் மதுரை வந்தவர்கள்.

மூலக்கதை