2 லட்சம் பாதிப்பை கடந்தது இந்தியா

தினகரன்  தினகரன்
2 லட்சம் பாதிப்பை கடந்தது இந்தியா

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நேற்று 2 லட்சத்தை கடந்தது. இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 71 நாட்கள் முடிந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:  நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 1,01,497 பேர் சிகிச்சை பெறுகின்றனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,00,302 ஆக உள்ளது. இதனால், குணமடைந்து வருவோரின் சதவீதம் 48.31 ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் இதுவரை வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்து 615 ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் வைரசால் 217 பேர் இறந்துள்ளனர். இதில், அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 103, டெல்லியில் 33, குஜராத்தில் 29, தமிழ்நாட்டில் 13 இறந்துள்ளனர்.இதுவரை அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,465, குஜராத்தில் 1,092, டெல்லியில் 556, தமிழகத்தில் 197 பேர் என, நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி பலியானோரின் மொத்த எண்ணிக்கை 5,815 ஆக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து 8 ஆயிரத்தை கடந்து வந்த நிலையில், நேற்று முதல் முறையாக 9 ஆயிரத்தை நெருங்கியது. தற்போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்  குணமடைந்தோரின் எண்ணிக்கை சம அளவில் உள்ளன.கொரோனா தடுப்பூசி 2ம் கட்ட சோதனைஅமெரிக்காவின் மாடர்னா பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,  `எங்கள் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி, நோயாளிகளிடம் வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்துள்ளது. இந்த மருந்து, முதல் கட்டமாக 45 தன்னார்வலர்களுக்கு மூன்று வெவ்வேறு அளவுகளில் கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. 2வது கட்டமாக, அடுத்த மாதம் 600 முதல் 1,000 பேருக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட உள்ளது. இந்த சோதனை வெற்றி பெறும் நிலையில், அடுத்தடுத்த கட்டங்களில் பெரிய குழுக்களை வைத்து மாடர்னா பரிசோதனை நடத்த இருக்கிறது,’ என்று தெரிவித்துள்ளது.

மூலக்கதை