அமெரிக்க சமபவம்: எங்கே, எப்படி நடந்தது?

தினமலர்  தினமலர்
அமெரிக்க சமபவம்: எங்கே, எப்படி நடந்தது?

கடந்த, மே 25-ம் தேதி மினியாபொலிஸ் நகரில், பெட்டிக்கடை ஒன்றுக்கு சிகரெட் வாங்க சென்றார் ஜார்ஜ் பிளாய்டு. அதற்கு பணமாக, 20 டாலர் நோட்டை எடுத்துக் கொடுத்தார். போலி டாலர் என்று நினைத்த கடைக்காரர் உடனடியாக போலீசாருக்கு போன் செய்து விடுகிறார்.

உடனே, போலீசார் அங்கே வந்தனர். காரில் வந்த நான்கு போலீஸ்காரர்களில் ஒருவரான, டெரக் சோவீன், காரை விட்டு இறங்கிய வேகத்தில் ஜார்ஜ் பிளாய்டை குப்புற படுக்க வைத்து, கைகளை பின்னால் கட்டி கழுத்தில் தன் முட்டியை வைத்து அழுத்துகிறார். ஜார்ஜ் பிளாய்டு, 'என்னால் மூச்சு விட முடியவில்லை; என்னைக் கொல்ல வேண்டாம்' என கெஞ்சினார். அந்த வெள்ளை போலீஸ் அதிகாரி தன் முட்டியை கழுத்தில் இருந்து எடுக்கவே இல்லை. அருகிலிருந்த மற்ற போலீஸ்காரர்களும் தடுக்கவில்லை. 8 நிமிடம், 46 வினாடிகளில் ஜார்ஜ் பிளாய்டு தன் உயிரை இழந்து விட்டார்.

இந்த சம்பவத்தை அப்படியே, 'வீடியோ'வாக பதிவு செய்தவர், 17 வயது சிறுமி டார்னெல்லா பிரேசியர். ஜார்ஜ் பிளாய்டு உயிரை இழக்கும் வீடியோவை, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட, அமெரிக்காவே பற்றி எரிகிறது. ஆனால், சமூக வலைதளங்களில், டார்னெல்லாவை ஏராளமானோர் விமர்சனமும் செய்தனர். 'நீ ஏன் அவரை காப்பாற்ற செல்லவில்லை' என்று டார்னெல்லாவை பார்த்து கேள்வி கணைகளைத் தொடுத்துஉள்ளனர்.தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு, அந்த சிறுமி பதிலளித்துள்ளார். 'நான் ஒரு மைனர் பெண். அங்கே நடந்த சம்பங்களை பார்த்ததும் பயந்து விட்டேன். 'என்னால், அந்த போலீசை எதிர்த்து போராடிவிட முடியுமென நினைக்கிறீர்களா. ஜார்ஜ் இறப்பதை, 5 அடி தொலைவிலிருந்து பார்த்தேன். அது, மிக மோசமான சம்பவம்' என, பதிலளித்து உள்ளார்.

ஜார்ஜ் மரணத்தை கண்டித்து நடந்து வரும் போராட்டங்களிலும் டார்னெல்லா பிரேசியர் கலந்து கொண்டுள்ளார்.'ஒரு மரணத்தை, கொலையை நேரில் பார்த்த அதிர்ச்சியில் இருந்து டார்னெல்லா இன்னும் மீளவில்லை; அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார்' என, அவருடைய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை