பிளாய்டுக்கு நினைவஞ்சலி: ஆயிரக்கணக்கானோர் பேரணி

தினமலர்  தினமலர்
பிளாய்டுக்கு நினைவஞ்சலி: ஆயிரக்கணக்கானோர் பேரணி

ஹூஸ்டன்; அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவருடைய சொந்த ஊரான, ஹூஸ்டனில், பிரமாண்ட பேரணி நடந்தது.

இதில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு, 46, சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந்நிலையில், பிளாய்டின் சொந்த ஊரான ஹூஸ்டனில், நேற்று அவருக்கு நினைவஞ்சலி பேரணி நடத்தப்பட்டது. இதற்கு, பிரபல ராப் பாடகர்கள், ட்ரே தா டுரூத், பன் பி ஏற்பாடு செய்திருந்தனர். இந்த அமைதிப் பேரணியில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மக்கள் வந்திருந்தனர். பல கட்சித் தலைவர்கள், எம்.பி.,க்கள் என பல தரப்பு மக்கள் கலந்து கொண்டனர். ஹூஸ்டன் மேயர் சில்வஸ்டர் டர்னரும், பேரணியில் பங்கேற்றார்.பிளாய்டு குறித்தும், கறுப்பின மக்களுக்கு சுதந்திரம் கேட்டும் பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த பேரணிக்காக, ஹூஸ்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரின் பல இடங்களில் இருந்த கற்கள் உள்ளிட்டவற்றை, நகர நிர்வாகம் அகற்றியது.இதற்கிடையே, நாட்டின் பல இடங்களில் நடந்த போராட்டங்களின் போது, போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தினர்.

இதுவரை நடந்துள்ள வன்முறைகளில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக, 6,000த்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மட்டும், 2,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பல மாகாணங்களில், கடந்த சில நாட்களாக இருந்ததைவிட, போராட்டம் சற்று தணிந்துள்ளது. 'போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புவேன்' என, அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில், ராணுவத்தை அனுப்பும் முடிவை, அதிபர் மாளிகை நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.சம நீதி வேண்டும்!இந்த நேரத்தில் ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கி பிரசங்கம் செய்ய விரும்பவில்லை. ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் பிரச்னையில், அரசு மிகப் பெரிய தோல்வியை அடைந்துவிட்டது. சம நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அந்த மக்களின் பிரச்னைகளை கேட்டறிய வேண்டிய நேரம் இது.ஜார்ஜ் புஷ், அமெரிக்க முன்னாள் அதிபர்உறுதி செய்வோம்!அனைத்து நகரங்களிலும், அனைத்து சமுதாயத்தினரும், அமைதியுடனும், பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் மற்றும் மன அமைதி அளிப்பதை அனைவரும் உறுதி செய்வோம்.

இந்த நேரத்தில், ஊரடங்கை அனைத்து தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும். வீட்டில் உள்ள அன்பானவர்களுடன் உங்களுடைய நேரத்தை செலவிடுங்கள்.மெலனியா டிரம்ப், அமெரிக்க அதிபரின் மனைவிஹீரோவான இந்தியர்வாஷிங்டனில் சமீபத்தில் நடந்த போராட்டத்தின்போது, திடீரென, வன்முறை வெடித்தது.

அப்போது, போராட்டக்காரர்களை போலீசார் விரட்டி யடித்தனர். அந்த நேரத்தில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராகுல் துபே, தன் வீட்டில், 75 போராட்டக்காரர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். அதனால், போலீஸ் நடவடிக்கைகளில் இருந்து அவர்கள் தப்பினர். தங்களை காப்பாற்றிய ராகுலை, அந்த மக்கள் ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர்.

மூலக்கதை