தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘நிசார்கா’ புயல் இன்று கரையை கடந்தது: மும்பையில் 10,000 கொரோனா நோயாளிகள் வெளியேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘நிசார்கா’ புயல் இன்று கரையை கடந்தது: மும்பையில் 10,000 கொரோனா நோயாளிகள் வெளியேற்றம்

மும்பை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘நிசார்கா’ புயல் இன்று மாலை கரையை கடந்தது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள நிசார்கா புயல் இன்று காலை தீவிர புயலாக உருவெடுத்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

தொடர்ந்து, இன்று பிற்பகல் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மும்பைக்கு அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு நிசார்கா புயல் மும்பையை தாக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை கடலோர பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். ஊரடங்கை தளர்த்தும் வகையில், மீண்டும் தொடங்கிய நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்த இரண்டு நாட்களுக்கு முடக்கப்படும் என்றும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.



நிசார்கா புயலானது மும்பையில் இருந்து 100 கி. மீ தூரத்தில் உள்ள அலிபாக் அருகே கரையை கடக்கும் என்றும், அந்த சமயத்தில் மணிக்கு 110 கி. மீ வேகத்தில் காற்று வீசும் என்றும், கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில், மக்கள் நடமாட்டத்திற்கு நாளை மாலை வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் நேற்றிரவு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தடையை மீறும் எவரும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா வைரஸ் நோயாளிகள் உட்பட 10,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நிசார்கா புயலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா மற்றும் குஜராத் முதலமைச்சர்களிடம் பேசியுள்ளார்.

புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான உதவிகள் செய்து தரப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். மும்பை பெருநகர பகுதியில் உள்ள குடிசைவாசிகள், குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

புயலால் விழுந்த மரங்கள், நிலச்சரிவுகள் மற்றும் அதிக மழையால் ஏற்படக்கூடிய சேதங்களைச் சமாளிக்க குழுக்கள் தயாராகி வருகின்றன. குஜராத்தின் வல்சாத் மற்றும் நவ்சாரி மாவட்டங்களில் உள்ள 47 கடலோர கிராமங்களைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் மற்றும் வர்த்தக கப்பல்கள் துறைமுகத்திற்குத் திரும்புமாறு எச்சரிக்கப்பட்டுள்ளன.

.

மூலக்கதை