கொரோனா தடுப்பூசியை கண்டறிவதற்காக மருத்துவ பரிசோதனைக்கு 30 குரங்குகள் தேவை: தேசிய வைராலஜி நிறுவனம் வனத்துறைக்கு கடிதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா தடுப்பூசியை கண்டறிவதற்காக மருத்துவ பரிசோதனைக்கு 30 குரங்குகள் தேவை: தேசிய வைராலஜி நிறுவனம் வனத்துறைக்கு கடிதம்

புனே: கொரோனா தடுப்பூசியை கண்டறிவதற்காக மருத்துவ பரிசோதனைக்கு 30 குரங்குகள் தேவை என்று, புனே தேசிய வைராலஜி நிறுவனம் மாநில வனத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து உலகெங்கும் பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்தியாவை பொருத்தவரை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தனித்தனியாகவும், ஒன்றிணைந்தும் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மகாராஷ்டிராவின் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்தில்  (என். ஐ. வி), கொரோனா  தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைக்காக 30 குரங்குகள் வனத்துறையிடம் கோரப்பட்டன.

இது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநில வனத்துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோட் கூறுகையில், ‘3 முதல் 4 வயது வரையிலான 30 குரங்குகள் தடுப்பூசி கண்டறிய மருத்துவ பரிசோதனைக்காக தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு வழங்கப்படும்.

இந்த குரங்குகள் புனே மாவட்டத்தின் வாட்கான் காட்டில் இருந்து பிடிக்கப்படும். கொரோனா தடுப்பூசி முதலில் குரங்குகள் மீது பரிசோதிக்கப்படும்.

அதனால், அதற்கான அனுமதியை வழங்கியுள்ளேன். பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் குரங்குகளை முறையாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரங்கைப் பிடிக்கும்போது வேறு எந்த மிருகத்திற்கும் பாதிப்பு ஏற்படாது. இந்த குரங்குகள் வணிக ரீதியாகவும் பயன்படுத்தப்படாது’ என்றார்.



தேசிய வைராலஜி நிறுவனத்தை பொருத்தவரை, பரிசோதனைக்கு உட்படுத்த பயன்படுத்தப்படும் குரங்குகளை பிடிக்க ஒரு குழுவை அமைக்கும். அந்த குழுவிற்கு உதவியாக வனத்துறையினர் அனுப்பப்படுவர்.

வைராலஜி நிறுவனம் இந்த திட்டத்தை வன மற்றும் வருவாய் துறை ஊழியர்களின் உதவியுடன் மேற்கொள்ளும். குரங்குகளை கையாள திறமையான பணியாளர்களை, வைரலாஜி நிறுவனம் வனத்துறையிடம் கடந்த மே 30ம் தேதி எழுதிய கடிதத்தில் கோரியுள்ளது.

மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், வனத்துறையினர் குரங்கை அடையாளம் கண்டு, அதனை பிடித்து தருவதற்கான வேலையில் இறங்கி உள்ளனர்.

.

மூலக்கதை