அதிமுக, பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர், டிஆர்எஸ் போன்ற நட்பு கட்சிகளுடன் பெரும்பான்மையை தாண்டும் பாஜக

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிமுக, பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர், டிஆர்எஸ் போன்ற நட்பு கட்சிகளுடன் பெரும்பான்மையை தாண்டும் பாஜக

* 19ம் தேதி 24 மாநிலங்களவை எம்பிக்கள் பதவிக்கு தேர்தல்
* குஜராத், மத்தியபிரதேசத்தில் காங். எம்எல்ஏக்களுக்கு வலை

புதுடெல்லி: அதிமுக, பிஜேடி, ஒய்எஸ்ஆர், டிஆர்எஸ் போன்ற நட்பு கட்சிகளின் ஆதரவால், இந்தாண்டு மாநிலங்களவையில் பெரும்பான்மை பலத்தை பாஜக பெறவுள்ளது.

வருகிற 19ம் தேதி 24 எம்பிக்கள் பதவிகளுக்கான தேர்தல் நடப்பதால் கட்சிகள் வேட்பாளர்ளை தேர்வு செய்து வருகின்றன. குஜராத், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக வலை வீசியுள்ளது.
2020ம் ஆண்டின் தொடக்கத்தில் மாநிலங்களவையில் 55 உறுப்பினர் காலியிடங்கள் ஏற்பட்டன.

அவற்றில் 37 இடங்கள் மார்ச் மாதம் போட்டியின்றி நிரப்பப்பட்டன. மீதமுள்ள 18 இடங்களுக்கான தேர்தலை மார்ச் 26ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில், தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சில தினங்களுக்குமுன் நடந்தது.

அப்போது, ‘கொரோனா நோய்த்தொற்று பிரச்னை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 24 மாநிலங்களவை உறுப்பினர் (18 பழைய காலியிடம், 6 புதிய காலியிடம்) இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது கொரோனா நோய்த்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகளை உறுதி செய்வதற்காக, அந்தந்த மாநிலங்களில் மூத்த அரசு அதிகாரி ஒருவர், சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலர் மூலம் நியமிக்கப்படுவர்’ என்று, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதில், ஆந்திரா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலத்தில் தலா 4 இடங்களுக்கும், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் தலா மூன்று இடங்களுக்கும், ஜார்க்கண்டில் இரு இடங்களுக்கும், மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரதேசம், மிசோரத்தில் தலா ஓரிடத்துக்கும் தேர்தல் நடைபெறும்.

ஆறு புதிய இடங்களுக்கு வேட்பு மனுக்களுக்கான கடைசி தேதி வரும் 9ம் தேதியும், வேட்புமனு திரும்பப் பெற 12ம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 224 ஆக உள்ளது.

இதில், பாஜக 75 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 88 ஆகவும், இக்கூட்டணியின் ஒரு பகுதியாக இல்லாத, ஆனால் பாஜகவுடன் நட்பாக இருக்கும் கட்சிகளில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய். எஸ். ஆர்.

காங்கிரஸ், அதிமுக, நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் (பிஜேடி), சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் 27 பேர் உள்ளனர். எதிர்கட்சிகள் என்று பார்த்தால் காங்கிரசில் 39 உறுப்பினர்களும், மற்ற மாநில கட்சிகளின் சார்பில் 69 உறுப்பினர்களும், மூன்று சுயேச்சைகள் மற்றும் ஒரு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினரும் உள்ளனர்.

மதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு உறுப்பினரை கொண்டுள்ளன.

வருகிற 2021ம் ஆண்டுக்குள் பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் நட்பு கட்சிகள் மாநிலங்களவையில் பெரும்பான்மை பலமான 123 உறுப்பினர்களை தாண்டும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

வரும் 19ம் தேதி வாக்கெடுப்புக்கு நடக்க உள்ள 24 உறுப்பினர்களுக்கான இடங்களில், மத்திய பிரதேசத்தில் மூன்று இடங்களில் 2, ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்டில் தலா ஒரு இடம், கர்நாடகாவில் இரண்டு இடங்கள் மற்றும் அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இடங்களில் தலா ஒரு இடத்தை பாஜக கைப்பற்றும். ஆந்திராவில் ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் நான்கு இடங்களையும் வெல்லும்.

மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை இரண்டு இடங்களை கைப்பற்ற துடிக்கும் பாஜக, கடந்த சில மாதங்களுக்கு முன்பே அரசியல் சித்துகளை அரங்கேற்றியது. அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியை பதவி இழக்கும் நிலைக்கு தள்ளியது.



காங்கிரஸ் இளம் தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்துக்கான ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆட்சியை இழக்க வேண்டியிருந்தது. இதற்கு பரிகாரமாக பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்கப்பட்டது.

இவருடன் சுமர் சிங் சோலங்கி என்பவரும் இங்கு வேட்பாளராக களத்தில் உள்ளனர். காங்கிரஸ் தரப்பில் திக்விஜய்சிங் மற்றும் பூல் சிங் பரையா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மூன்று இடங்களுக்கு 4 பேர் களம் இறங்குவதால், அங்கு போட்டி பலமாக இருக்கும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் வேட்பாளரான மாநில பிரிவு தலைவர் தீபக் பிரகாஷ், காங்கிரஸ் ஷாஜாதா அன்வர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் பாஜகவின் வேட்பாளர்கள் ரமிலாபென் பரா, அபய் பரத்வாஜ் ஆகியோரும், காங்கிரசில் சக்திசிங் கோஹில் மற்றும் பாரத்சிங் சோலங்கி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

குஜராத்தில் தேர்தல் நடக்கவுள்ள நான்கு இடங்களில் மூன்று இடங்களை பாஜக கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. எம்எல்ஏக்களின் கணக்குகளை வைத்து பார்த்தால் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தலா இரண்டு இடங்கள் கிடைக்கும்.

இருப்பினும், படேல் சமூக எம்எல்ஏக்களின் வாக்குகளைப் பெற பாஜக தரப்பில் காங்கிரஸ் எதிர்ப்பு அணியைச் சேர்ந்த நர்ஹரி அமீனை நிறுத்தியதால், அங்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எப்படியாகிலும், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பாஜக - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே போட்டி பலமானதால், கட்சிகள் பேரங்களை தொடங்கி உள்ளன.

ராஜஸ்தானில், பாஜக தனது மாநில துணைத் தலைவர் ராஜேந்திர கெலாட்டை வேட்பாளராக நியமித்துள்ளது. இங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே. சி. வேணுகோபால் மற்றும் நீரஜ் டாங்கி ஆகியோரும் களத்தில் உள்ளனர்.



ஆந்திராவில் ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் வேட்பாளர்களாக பி. சுபாஷ் சந்திரபோஸ், மொபிதேவி வெங்கடரமணா, அயோத்தி ராமி ரெட்டி மற்றும் பரிமல் நாத்வானி ஆகியோர் போட்டியிடுகின்றனர். எப்படியாகிலும் 2021ம் ஆண்டுக்குள் பாஜக மற்றும் அதன் கூட்டணி பெரும்பான்மை பலத்தை (123 பேர்) பெறவுள்ளது.

கடந்த காலங்களில் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால், பாஜக கொண்டு வந்த பல மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. ஆனால், இந்தாண்டு மட்டும் கிட்டத்தட்ட 61 எம்பிக்கள் புதியதாக தேர்வு செய்யப்படுவதால், சில நட்புக் கட்சிகளின் ஆதரவுடன் முக்கிய மசோதாக்களை பாஜக மாநிலங்களவையில் எளிதாக நிறைவேற்றும் என்கின்றனர்.



இந்நிலையில், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 37 உறுப்பினர்கள் கொரோனா ஊரடங்கால் இன்னும் பதவிப் பிரமாணம் எடுக்கவில்லை. இந்த பதவியேற்பு நிகழ்விற்கு மாநிலங்களவை செயலகம் இரண்டு தேதிகளை தேர்வு செய்திருந்தாலும், எம்பியாக தேர்வு செய்யப்பட்ட பலர் தாங்கள் டெல்லி வரமுடியாத சூழலில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதனால், அவர்களின் பதவிப் பிரமாண தேதி பின்னர் புதியதாக அறிவிக்கப்படும் என்று நாடாளுமன்ற விவரங்களை அறிந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எப்படி தேர்தல் நடக்கும்?
மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 250 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 238 பேர் தேர்தல் மூலமும், மீதமுள்ள 12 பேர் நியமனம் மூலம் எம்பியாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

தற்போது மாநிலங்களவையில் மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 245. இவர்களில் 233 பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அத்துடன் 12 பேர் எம்பிக்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். மாநிலங்களவையில் மூன்றில் ஒரு பங்கு எம்பிக்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முடிவடையும்.

அதற்கான தேர்தல் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் நடைபெறுகிறது. இதன்படி ஒரு வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெறவேண்டும்.



அதாவது வெற்றி பெறவேண்டிய வாக்குகள் = (மொத்தமுள்ள ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை) X 100/ (காலியிடங்கள்+1))+1 என்ற அளவீட்டின் மூலம் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக தற்போது ஒரு மாநிலத்தில் 234 எம்எல்ஏக்கள் மற்றும் அம்மாநிலத்திற்கு 6 காலியிடங்கள் மாநிலங்களவையில் உள்ளது என்றால், ஒரு எம்எல்ஏவின் வாக்கு 100 என்ற அடிப்படையில் பிரதிநிதித்துவ அடிப்படையில் வெற்றி பெற 3343. 85 வாக்குகள் தேவை.

இதைவைத்து பார்க்கும் போது 34 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் ஒருவர் எம்பி-யாக வெற்றிப் பெற முடியும்.

எம்எல்ஏக்களின் வாக்கு எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மாறும்

.

மூலக்கதை