கொரோனாவால் வருவாயை குவித்த ஜூம் செயலி..!

தினமலர்  தினமலர்
கொரோனாவால் வருவாயை குவித்த ஜூம் செயலி..!

வாஷிங்டன்: கொரோனா ஊரடங்கு காரணமாக வீடியோ கான்பரன்ஸ் செயலியான ஜூம் செயலியின் வருவாய் கடந்தாண்டாடு ஒப்பிடுகையில் 169 சதவீதம் அளவுக்கு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலாண்டில் மட்டும் ஜூம் செயலி 328 மில்லியன் டாலரை வருவாயாக ஈட்டியுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் 122 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டியிருந்தது. 10க்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்ட 2 லட்சத்து 65 ஆயிரத்து 400 நிறுவனங்கள் தங்களது செயலியை பயன்படுத்துவதாகவும், கடந்தாண்டு ஒப்பிடுகையில் இது 354 சதவீதம் அதிகமெனவும் தெரிவித்துள்ளது.

வணிக ரீதியான தொடர்பு கொள்வதற்காக கருவியாக பத்தாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட ஜூம் செயலி, இந்தாண்டு துவக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்களிடையே மிகவும் பிரபலமானது. பிறந்தநாள் கொண்டாட்டம், திருமணம், மத வழிபாடுகள், அமைச்சரவை கூட்டம் என பல தரப்பினரும் பயன்படுத்த துவங்கினர். கொரோனா தொற்று காரணமாக ஜூம் செயலியை இலவசமாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தது. பணம் செலுத்தும் முன் 40 நிமிடங்கள் வரை ஜூம் செயலியை பயன்படுத்த முடியும்.'வீட்டில் இருந்து வேலை செய்வது மற்றும் சமூக இடைவெளி முயற்சிகள் தான் ஜூம் செயலியை அர்த்தமுள்ளதாக எடுத்து கொள்ளவும், அதிகமானோர் பயன்படுத்த காரணம் . இந்த நெருக்கடியான நேரத்தில் நல்ல நோக்கத்துடன், எண்ணிடலங்காத வகையில் முழுமையான தொழில்நுட்ப ஆதரவு இல்லாத, முதல்முறையாக பயன்படுத்துவோர் எதிர்கொள்ளும் சவால்களை முழுமையாக கருத்தில் கொள்ளாமல் எங்கள் தளத்தை திறந்தோம். அதன் விளைவாக, இடையூறு, பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சிக்கல்களை சந்திப்பது உள்ளிட்ட எதிர்மறை செய்திகளை அனுபவித்தோம் 'என ஜூம் செயலியின் சி.இ.ஓ எரிக் யுவான் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் ஜூம் செயலி பிரமாண்ட வளர்ச்சி பெற்றாலும் அதன் பயனர்களின் பாதுகாப்பு விஷயத்தில் சர்ச்சைகளும் எழுந்தன. ஜூம் கூட்டங்களுக்கு நடுவே ஆபாச மற்றும் அவதூறுகளை பகிர்ந்து கொண்டு இடையூறு ஏற்பட்டதால் நியூயார்க் , சிங்கப்பூரில் தற்காலிக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்தியாவிலும் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக உள்துறை அமைச்சகம், ஜூம் செயலியை பயன்படுத்த தடை விதித்தது. இதனை தொடர்ந்து தனிநபர் உரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக புதிய அம்சங்களை 90 நாட்கள் வரை நிறுத்தி வைப்பதாக ஜூம் செயலி அறிவித்தது.

ஜூம் செயலியின் பிரமாண்ட வளர்ச்சியை தொடர்ந்து தற்போது பேஸ்புக், கூகுள் போன்ற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் வீடியோ கான்பரன்ஸ் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன.

மூலக்கதை