ஐநா பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு 17ல் தேர்தல்: இந்தியா வெற்றி உறுதி

தினகரன்  தினகரன்
ஐநா பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு 17ல் தேர்தல்: இந்தியா வெற்றி உறுதி

ஐக்கிய நாடுகள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 தற்காலிக உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் இந்தியா வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 10 தற்காலிக உறுப்பினர் பதவிகளில் 5 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும். இதில் தேர்வாகும் நாடுகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். இம்முறை ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து இந்தியா இப்பதவிக்கு போட்டியிடுகிறது. தேர்தலை நடத்துவது தொடர்பாக, 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐநா பொதுச்சபை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், வரும் 17ம் தேதி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, இந்தத் தேர்தலில் புதிய வாக்குப்பதிவு முறை கடைப்பிடிக்கப்பட உள்ளது. இம்முறை, 193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ரகசியமாக வாக்களிப்பர். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா மட்டுமே போட்டியிடுவதால், அதன் வெற்றி உறுதியாகி உள்ளது. இதற்கு முன், இந்தியா 1950-51, 1967-68, 1972-73, 1977-78, 1984-85, 1991-92 மற்றும் 2011-12ல் தற்காலிக உறுப்பினராக இருந்துள்ளது.

மூலக்கதை