சீனாவில் விவாகரத்தால் ஒரே நாளில் 24,320 கோடி சொத்துடன் பணக்காரராக மாறிய பெண்

தினகரன்  தினகரன்
சீனாவில் விவாகரத்தால் ஒரே நாளில் 24,320 கோடி சொத்துடன் பணக்காரராக மாறிய பெண்

பீஜிங்: சீனாவின் ஷென்ஜென் நகரில் வசிக்கும் யுவான் லிபிங் என்ற பெண்மணி விவாகரத்து செய்து கொண்டதன் மூலம் ரூ 24,320 கோடி சொத்துடன் உலகின் பணக்கார பெண்களில் ஒருவராக மாறியுள்ளார்.  சீனாவின் ஷென்ஜென் நகரில் உள்ள கங்டாய் உயிரியல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் து வெய்மின். இவர் தனது தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தின் 1613 கோடி பங்குகளை விவாகரத்துக்கு இழப்பீடாக மனைவி யுவான் லிபிங் பெயருக்கு மாற்றி உள்ளார். இதன் தற்போதைய மதிப்பு ரூ.24,320கோடியாகும். தற்போது, இவர் இந்நிறுவனத்தின் பங்குகளை நேரடியாக  வைத்திருக்கிறார். இதன் மூலம், உலக பணக்கார பெண்களின் வரிசையில் யுவான் இடம் பெற்றுள்ளார். கனடா குடியுரிமை பெற்றவரான யுவான், தற்போது ஷென்ஜென் நகரில் வசித்து வருகிறார். இவர், இதற்கு முன்னர் கங்டாய் நிறுவனத்தின் இயக்குனராக கடந்த 2011 மே முதல் 2018 ஆகஸ்ட் வரை பணியாற்றி உள்ளார். அதன் பிறகு, தற்போது வரை அதன் துணை நிறுவனமான பீஜிங் மின்காய் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை பொது மேலாளராக பணி புரிந்து வருகிறார். கங்டாய் நிறுவனத்தின் அதிகாரத்தை வெய்மின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரத்துக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், தனது வாக்கு உரிமையை அவருக்கு யுவான் விட்டு கொடுத்துள்ளதாக அவரது விவாகரத்து மனுவில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, மனைவிக்கு பங்குகளை விட்டுக் கொடுத்ததின் மூலம், வெய்மினின் நிகர சொத்து மதிப்பு ரூ 48,908 கோடியில் இருந்து ரூ 23,588 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. சீனாவில் வெய்மின் மட்டுமே அதிக விலை கொடுத்து விவாகரத்து பெறவில்லை. அதற்கு முன்பு கடந்த 2012ல் வூ யாஜூன் அவரது கணவர் காய் குய்-க்கும், 2016ல் ஜூவோ யாகுய் அவரது மனைவி லி கியோங்கிற்கும் அதிக விலை கொடுத்தே விவாகரத்து பெற்றுள்ளனர்.

மூலக்கதை