25,000 த்தை நெருங்குது கொரோனா பாதிப்பு : சென்னையில் குறையாமல் தொடர்ந்து அடம்

தினமலர்  தினமலர்
25,000 த்தை நெருங்குது கொரோனா பாதிப்பு : சென்னையில் குறையாமல் தொடர்ந்து அடம்

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 13 ஆயிரத்து 706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கொரோனா பாதிப்புடன் 10 ஆயிரத்து 680 பேர்; அறிகுறியுடன் 7176 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 11 ஆயிரத்து 94 பேருக்கு பரிசோதனை நடந்தது; அதில் 1091 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 55 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.
சென்னையில் 809 பேர்; செங்கல்பட்டில் 82; திருவள்ளூரில் 43 பேர்; துாத்துக்குடியில் 51 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற மாவட்டங்களிலும் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு தொடர்கிறது.
இதுவரை மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட 5.14 லட்சம் பரிசோதனைகளில் 24 ஆயிரத்து 586 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் 16 ஆயிரத்து 585 பேர்; செங்கல்பட்டு 1308 பேர்; திருவள்ளூர் 1025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மற்ற மாவட்டங்களில் பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. நேற்று 536 பேர் வீடு திரும்பினர். இதுவரை 13 ஆயிரத்து 706 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களில் இறந்தவர்களில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சென்னையை சேர்ந்த 50 வயது பெண் 28ம் தேதி; 55 பெண் 29ம் தேதியும் உயிரிழந்தனர்.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற சென்னையை சேர்ந்த 73 78 வயது முதியவர்களும் 56 வயது நபரும் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். 78 வயது முதியவர் 30ம் தேதியும் 56 வயது பெண் 31ம் தேதியும் இறந்தனர்.

ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சென்னையை சேர்ந்த 56 வயது நபர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 62 70 73 வயது முதியவர்கள் நேற்று முன்தினம் அடுத்தடுத்து இறந்தனர்.அதே மருத்துவமனையில் 74 வயது முதியவர் 30ம் தேதி; 70 வயது முதியவர் நேற்றும் உயிரிழந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 72 வயது நபர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுவரை கொரோனாவால் 197 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை