தொற்றின் உச்சம் வெகு தொலைவில் உள்ளது: ஐ.சி.எம்.ஆர்.,நம்பிக்கை

தினமலர்  தினமலர்
தொற்றின் உச்சம் வெகு தொலைவில் உள்ளது: ஐ.சி.எம்.ஆர்.,நம்பிக்கை

புதுடில்லி: ‛நாடு முழுவதும், ‛கொரோனா' பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், சமூக பரவலாகி, உச்ச நிலையை எட்டுவதில் இருந்து, நாம் வெகு தொலைவில் இருக்கிறோம்' என, மத்திய அரசு நேற்று தெரிவித்தது.

இது குறித்து, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வாளர், நிவேதிதா குப்தா கூறியதாவது:சமூக பரவல் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு பதில், வருங்காலத்தில் இந்த தொற்று, எவ்வளவு தீவிரமடையும் என்பதையும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நாம் எங்கு நிற்கிறோம் என்பதையும் அறிவது அவசியம்.

இதை மதிப்பிட, 34 ஆயிரம் பேரிடம், கருத்து கணிப்பு நடத்தியுள்ளோம். இதன் முடிவுகள், வரும் வாரங்களில், வெளியாகும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், தொற்றை கட்டுப்படுத்துவதில், நாம் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறோம். ‛பீக்' எனப்படும், தொற்றின் உச்ச நிலையை அடைவதில் இருந்து, நாம் மிக தொலைவில் உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மத்திய சுகாதாரத்துறை இணை செயலர், லாவ் அகர்வால், செய்தியாளர்களிடம், நேற்று கூறியதாவது:உலக அளவில், கொரோனா பாதிப்பில், இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது என்று, பொதுவாக பார்ப்பதே தவறான கண்ணோட்டம். இந்த விஷயத்தில், நமது நாட்டின் மக்கள் தொகையையும், நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

உலக அளவில், இறப்பு விகிதம், 6.13 சதவீதமாக உள்ளது. இந்தியாவில், 2.82 சதவீதமாக உள்ளது. இது, சர்வதேச அளவில் ஒப்பிடுகையில், மிகக் குறைவு. நாம், சரியான நேரத்தில் தொற்றை கண்டறிவதும், முறையான சிகிச்சை அளிப்பதுமே, இறப்பு விகிதத்தை கட்டுக்குள் வைத்துள்ளது. உலக அளவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேரில், 4.9 சதவீதம் பேர் இறக்கின்றனர். அதுவே, இந்தியாவில், 0.41 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை