ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச முகக் கவசம்: இ.பி.எஸ்., பரிசீலனை

தினமலர்  தினமலர்
ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச முகக் கவசம்: இ.பி.எஸ்., பரிசீலனை


சென்னை : ''அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலவசமாக முகக் கவசம் வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

சென்னையில், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து, மாநகராட்சி அலுவலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்த பின், அவர் கூறியதாவது:மருத்துவ பணியாளர்கள் சரியான முறையில் சிகிச்சை அளித்துள்ளதால், அதிகம் பேர் குணம் அடைந்துள்ளனர்.

இறப்பு விகிதம்,0.80 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே, அச்சப்பட தேவையில்லை.
'மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில், 9.14 லட்சம், பி.சி.ஆர்., கருவிகள் இருந்தது. அதில், 4.66 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டு, மீதம், 1.76 லட்சம் கருவிகள் கையிருப்பு உள்ளது என, முதல்வர் தெரிவித்துள்ளார். மீத கருவிகள் குறித்து தகவல் இல்லை' என, எதிர்கட்சி தலைவர், ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அவை, 43 மையங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஸ்டாலின் திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி உள்ளார்.

'ஊரடங்கை தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள, முதல்வர் பயன்படுத்தி கொள்கிறார்' என்றும்,ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் தான் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அரசு சரியான முறையில், நோய் தடுப்பு பணிகளை மேற்காண்டு வருகிறது. 2,841 வென்டிலேட்டர்கள் உள்ளன. மருத்துவமனையில், ஐந்து பேருக்கு மட்டும், வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வென்டிலேட்டர் இல்லை எனக்கூறுவது அப்பட்டமான பொய். எதிர்க்கட்சி தலைவர் தவறானத கவல் அளித்து, மக்களை குழப்ப வேண்டாம்.

சென்னையில், கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 17 ஆயிரத்து, 500 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், 75 ஆயிரம் படுக்கை வசதி தயாராக உள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளிக்க, உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்த வகையிலும், அரசு பின்னடையவில்லை.
சென்னை மாநகராட்சியில், 1.50 கோடி முகக் கவசம் வாங்கி, ஏழை மக்களுக்கு கொடுத்துள்ளோம். மேலும், அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும், இலவசமாக முகக்கவசம் வழங்க பரிசீலித்து வருகிறோம். அதாவது, 2.1 கோடி குடும்பத்தை சேர்ந்த, ஏழு கோடி பேருக்கு, தலா இரண்டு முகக் கவசம் வீதம், 14 கோடி முகக் கவசங்கள் வழங்க, அரசு பரிசீலித்து வருகிறது.இவ்வாறு, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.

'சென்னை சவாலான நகராக உள்ளது'சென்னை மாநகராட்சியில் நடந்த, ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது: மக்கள் அதிகம் நிறைந்த பகுதி சென்னை. ஆனால், அரசு அறிவித்த வழிகாட்டு முறைகளை, மக்கள் பின்பற்றவில்லை என்பது, மிக மிக வருத்தமான செய்தி. அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றினால், இந்த தொற்று, இவ்வளவு நபர்களுக்கு பரவியிருக்காது. நோய் பரவலை தடுக்க, அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில், அதிக பரிசோதனை செய்கிறோம். தொற்றா நோய் பாதிப்புள்ள, 3.50 லட்சம் பேரை கண்காணிக்கவும், தேவையான மருத்துவ சேவைகள் கிடைக்கவும், 1,300 செவிலியர்கள், 480 அங்கன்வாடி பணியாளர்கள் பணி அமர்த்தப்ட்டுள்ளனர். இந்நோயை ஒழிக்க முடியாது; கட்டுப்படுத்த முடியும் என, மருத்துவ நிபணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதையே, அரசும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள், அரசு அறிவிக்கும் வழிமுறைகளை கடைபிடித்து, அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். சென்னை, ராயபுரத்தில், 1,400 தெருக்கள் உள்ளன. இதில், 136 தெருக்களில், நோய் பரவல் அதிகம் உள்ளது. அங்கு பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. யாரும் அச்சப்பட தேவையில்லை. இன்றைக்கு சென்னை தான் சவாலான நகரமாக உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், நோய் தொற்று சற்று அதிகரித்துள்ளது. இதனால், முழு தளர்வு அளிக்க முடியவில்லை. எனினும், படிப்படியாக நோய் பரவல் தடுக்கப்பட்டு, சென்னையிலும் தளர்வு கொடுக்க, அரசு முயற்சி செய்யும். சென்னை மக்கள், அரசு அறிவித்த வழிகாட்டுதல்களை பின்பற்றி, அருள்கூர்ந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.மூலக்கதை