ரூ.188 லட்சம் கோடி வழங்க கோரி 225 பிரபலங்கள் ஜி- 20 நாடுகளுக்கு கடிதம்

தினமலர்  தினமலர்
ரூ.188 லட்சம் கோடி வழங்க கோரி 225 பிரபலங்கள் ஜி 20 நாடுகளுக்கு கடிதம்

நியூயார்க்: 'கொரோனா பாதிப்பில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர வருவாய் நாடுகள் மீண்டெழ, உடனடியாக, 188 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும்' என, முக்கிய பிரமுகர்கள் 225 பேர், 'ஜி-20' நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


பிரிட்டன் முன்னாள் பிரதமர், கார்டன் பிரவுன் உள்ளிட்ட உலக தலைவர்கள், 75 பேர், இந்தியா வின் அமர்த்யா சென், கைலாஷ் சத்யார்த்தி உள்ளிட்ட நோபல் பரிசு பெற்ற நான்கு பேர், ஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் பான் கி மூன் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பிய அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:உலக மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர், ஏழை நாடுகளிலும், நடுத்தர வருவாய் உள்ள நாடுகளிலும் வசிக்கின்றனர். கொரோனா தாக்கத்தால், இந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட நாடுகள், நிதியுதவி கோரி, சர்வதேச நிதியத்தை அணுகி உள்ளன.கடந்த மார்ச்சில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் கூட்டத்தில், வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு, போர்க்கால அடிப்படையில், 375 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதில், 50 சதவீதம் தான் வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், உலகளவில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதனால், ஜி-20 நாடுகள் உறுதி அளித்தபடி, ஏழை மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு, உடனடியாக,188 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும். இதன் மூலம், ஏழை நாடுகள், மீண்டும் கொரோனா அலை தோன்றுவதை தடுக்க முடியும். ஆப்ரிக்காவைச் சேர்ந்த, 40 நாடுகள் உட்பட, 76 நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்குவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை