அதிகாரிகளின் முடிவு... மக்களுக்கு துன்பம்!

தினமலர்  தினமலர்
அதிகாரிகளின் முடிவு... மக்களுக்கு துன்பம்!

திருப்பூர்:மாநில நெடுஞ்சாலையில், சிறுபாலம் பணியை திட்டமிடாமல் துவங்கியதால், மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.திருப்பூர் நெடுஞ்சாலை உட்கோட்டத்துக்கு உட்பட்ட, திருப்பூர் -மங்கலம், மாநில நெடுஞ்சாலை ரோடு சீரமைப்பு பணி நடந்து வருகிறது. ரோடு விரிவாக்கத்துடன், சுல்தான்பேட்டை பஸ் ஸ்டாப் அருகே, ரோட்டின் குறுக்கே, சிறுபாலம் அமைக்கும் பணியும் துவங்கியுள்ளது.
தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் ரோட்டில், முன்னறிவிப்பின்றி, பாலம் கட்ட ரோட்டில் குழி தோண்டினர். குறுகிய ரோடு வசதியுள்ள ஜீவா நகர் வழியாக, வாகனங்கள் சென்றுவர மாற்றுவசதி செய்யப்பட்டது.அப்பகுதி மக்கள், கனரக வாகனம் மற்றும் கார் வருவதை தடுக்க, தடுப்பு அமைத்தனர். 'டூ வீலர்' மட்டும் சென்றுவர அனுமதித்தனர். இதனால், காரில் வருவோரும், டவுன் பஸ்களும், நீண்ட துாரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பல்லடம் ரோட்டிலும்...நேற்று காலை, 11:00 மணியளவில் பல்லடம் ரோடு, எம்.ஜி., புதுார் சந்திப்பு அருகே சர்வீஸ் ரோட்டில் போலீசார் பேரிகார்டு வைத்து தடுப்பு ஏற்படுத்தினர். வாகன ஓட்டிகள் காமராஜர் ரோடு வழியாக பாலத்தில் திருப்பி விட்டனர்.இதனால், மாநகராட்சி சந்திப்பு, பார்க் ரோடு, நேரு வீதி வழியாக டவுன்ஹால் சென்று, 2.5 கி.மீ., சுற்றி காமராஜர் ரோடு சென்றனர்.
திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் போக்குவரத்து மாற்றம் செய்ததால் காமராஜர் ரோடு, பாலம், மாநகராட்சி சந்திப்பு, பார்க்ரோடு, குமரன் ரோட்டில் மதியம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போக்குவரத்து மாற்றம் செய்வதற்கு முன், வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் தெரியப்படுத்த வேண்டும். இல்லாவிடில், கொளுத்தும் வெயிலில், வாகன ஓட்டிகள், அங்குமிங்கும் அலைவது தொடர்கதையாகி விடும். திருப்பூரில் நேற்று இரண்டு இடங்களில், அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது.

மூலக்கதை