கோவில்கள் திறப்பு குறித்து அரசு இன்று ஆலோசனை

தினமலர்  தினமலர்
கோவில்கள் திறப்பு குறித்து அரசு இன்று ஆலோசனை

சென்னை, தமிழகத்தில், கோவில்களை திறப்பது குறித்து, சமய தலைவர்களுடன், இன்று ஆலோசனை நடக்க உள்ள நிலையில், சில வேண்டுகோள்களை, பக்தர்கள் முன்வைத்துள்ளனர். ஊரடங்கால் வழிபாட்டு தலங்கள் அனைத்திலும், பக்தர்கள் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டரை மாதங்களாக, பக்தர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். கோவிலை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் லட்சக்கணக்கான வியாபாரிகள், வாழ்வாதாரம் இழந்து, தவிக்கின்றனர்.


இந்நிலையில், வரும், 8ம் தேதி முதல், பத்தர்கள் தரிசனத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில், இது தொடர்பாக, சமய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த, மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, சென்னை, தலைமைச் செயலகத்தில், இன்று நடக்கும் கூட்டத்தில், வழிபாட்டுத் தலங்களில், பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்தும், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், ஆலோசிக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக, பக்தர்கள் கூறியதாவது:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், கோவில்களில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கலாம். கோவில்களில், சமூக விலகலை கடைப்பிடிப்பது, கட்டாயம் ஆக்கப்பட வேண்டும்.
தரிசன அனுமதிக்கு முன், சம்பந்தப்பட்ட கோவில்களில், அதற்கான வசதிகளை முன்கூட்டியே ஏற்படுத்த வேண்டும். ஆனால், 'ஆன்-லைன்' தரிசன திட்டம் வேண்டாம். அதை அனுமதித்தால், படிக்காதவர்களுக்கு சிரமம் ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை