கொரோனாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை: விரிவான வழிமுறை

தினமலர்  தினமலர்
கொரோனாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை: விரிவான வழிமுறை

புதுடில்லி: கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில், உலக நாடுகள் போட்டி போட்டு வருகின்றன.ஆனால், 'மிக எளிமையான சுகாதார நடவடிக்கைகளுடன், சில குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்வதன் மூலம், வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்' என, மத்திய அரசின், 'ஆயுஷ்' அமைச்சகம் கூறியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி, மருந்து தயாரிக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு, அவரவருடைய நிலைக்கு ஏற்ப, சில மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

இயற்கை வைத்தியம்



தற்போதைய நிலையில், 14 நாட்கள் தனிமையில் இருப்பது, முக கவசம் அணிந்திருப்பது, துாய்மையுடன் இருப்பது ஆகியவையே சிறந்த தடுப்பு மருந்தாகவும், சிகிச்சை முறையாகவும் உள்ளது.நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ, சுகாதார முறைகளான, ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவை அடங்கிய, ஆயுஷ் அமைச்சகம் சார்பில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான விரிவான வழிமுறைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

நாடு முழுதும், பாரம்பரிய முறை சிகிச்சை அளிக்கும், ஏழு லட்சம் மருத்துவர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் ஒரு கையேட்டை வடிவமைத்துள்ளது. அதில், பல்வேறு பிரிவினருக்கு எவ்விதம் சிகிச்சை அளிக்க வேண்டும், எந்தெந்த மருந்துகளை அளிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது.இந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றோரின் ஆலோசனைகளின்படி, இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய சிகிச்சை



இது, சிகிச்சை அளிப்பதற்கான கையேடு என்றாலும், சாதாரண மக்களும் படித்து, அதன்படி நடந்து கொண்டால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும்.'நோய்நாடி, நோய்முதல் நாடி, அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்ற குறளுக்கு ஏற்ப, சிகிச்சை அளிப்பது தான், ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி போன்ற நம் பாரம்பரிய சிகிச்சை முறைகளின் அடிப்படை குணம்.அதற்கேற்ப, ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள கையேட்டில், நோய்த் தடுப்பு, நோய் நிர்வாகம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் என, வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளோர் மற்றும் பாதிக்கக் கூடிய வாய்ப்புள்ளோருக்கு சிகிச்சை அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது.

ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள கையேட்டில் கூறப்பட்டுள்ளதாவது:முதல் பிரிவில், வைரஸ் தொற்று உள்ளோர் அல்லது இல்லாதோர் மற்றும் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு, தனிமைப்படுத்துதல் மற்றும் வீட்டு தனிமைப்படுத்துதலின்போது அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து கூறப்

பட்டுள்ளது.இரண்டாவது பிரிவில், லேசாக அல்லது தீவிர அறிகுறிகள் உள்ளோர், மற்ற நோய்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளோருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து கூறப்பட்டுள்ளது.மூன்றாவதாக, வைரஸ் பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் உள்ள, கர்ப்பிணிகள், பாலுாட்டும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு அளிக்க வேண்டிய தடுப்பு மருத்துவம் குறித்து கூறப்பட்டு உள்ளது.அதற்கடுத்து, வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, அதில் இருந்து மீள்வதற்கும், மீண்டவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் அளிக்க வேண்டிய மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.

வைரஸ் பரவாது



இவ்வாறு ஒவ்வொரு பிரிவினருக்கும் அளிக்க வேண்டிய மருந்துகள் குறித்து கூறப்பட்டுள்ள நிலையில், பொதுவாக அனைத்து தரப்பினருக்கும், சில எளிய, சுலபமாக செய்ய வேண்டிய, கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.தற்போது, அனைவரும் பின்பற்றி வரும், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிவது, நிச்சயம் வைரஸ் பரவலைத் தடுக்கும். கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.மற்றவர்களை தொடுவது, பொது இடங்களில் துப்புவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், பெண்கள் குழந்தைகளுக்கு பாலுாட்டலாம். அதனால் வைரஸ் பரவாது.
இந்த அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவதுடன், உடலுக்கு தேவையான சத்துகளை தரும் ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஜீரணமாவதற்கு அதிக காலம் எடுக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

துாங்க வேண்டும்



தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், யோகா, பிராணாயாமம் போன்றவற்றை செய்வது, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.குறைந்தபட்சம், 7 - 8 மணி நேரம் துாங்க வேண்டும். பகல் நேரத்தில் துாங்குவதை தவிர்க்கவும். இரவில், சூரிய அஸ்தமனத்துக்கு, மூன்று மணி நேரத்துக்குள் அல்லது இரவு, 8:00 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும். சாப்பிட்ட, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்குள் துாங்க வேண்டும்.இவ்வாறு, அந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை