அமெரிக்கா தொடர் போராட்டம் : ராணுவத்தை அனுப்பவதாக டிரம்ப் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
அமெரிக்கா தொடர் போராட்டம் : ராணுவத்தை அனுப்பவதாக டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன் :அமெரிக்க போலீசால், கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, போராட்டங்கள் எட்டாவது நாளாக தொடர்ந்தது; பெரும்பாலான நகரங்களில், வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், 'நிலைமையை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், ராணுவத்தை அனுப்புவேன்' என, அதிபர், டொனால்டு டிரம்ப் ஆவேசமாக கூறியுள்ளார்.


அமெரிக்காவின் மினியாபொலிசில், ஜார்ஜ் பிளாய்டு, 46, என்ற ஆப்ரிக்க அமெரிக்கரிடம், ஒரு போலீஸ்காரர், சந்தேகத்தின் அடிப்படையில், சமீபத்தில் விசாரணை நடத்தினார்.
அப்போது, பிளாய்டை தரையில் சாய்த்து, அவருடைய கழுத்தில், தன் கால் முட்டியாமல் அந்த போலீஸ்காரர் நெருக்கியுள்ளார். இதில், மூச்சுவிட முடியாமல், பிளாய்டு, அதே இடத்தில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து, அமெரிக்கா முழுதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பெரும்பாலான நகரங்களில், இந்தப் போராட்டங்கள், வன்முறையாக மாறியுள்ளன.
வாஷிங்டனில், அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அருகே உள்ள, அதிபர்கள் வழிபடும் பழங்கால சர்ச் உள்பட நாடு முழுதும் பல சர்ச்சுகள் சேதப்படுத்தப் பட்டன.
லிங்கன் நினைவிடம் உள்பட பல வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள், நினைவிடங்களையும், போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.நாட்டில் உள்ள, 50 மாகாணங்களில், ஆறு மாகாணங்களில், அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், 13 முக்கிய நகரங்களிலும், அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாக, ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உறுதி செய்வோம்



இந்த நிலையில், அதிபர் டொனல்டு டிரம்ப், 'டிவி' மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்டு மற்றும் அவருடைய குடும்பத்துக்கு, அரசு ஆதரவாக இருக்கும். அவர்களுக்கு நீதி கிடைப்பதை நாம் உறுதி செய்வோம்.
அதே நேரத்தில் தற்போது நடந்து வரும் வன்முறை சம்பவங்களை, நிச்சயம் ஏற்க முடியாது. இவை அமைதிப் பேரணி அல்ல; உள்நாட்டு வன்முறை. நாட்டின் சொத்துக்களை சேதப்படுத்தி, மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்துவது, மனிதகுலத்துக்கு எதிரானது; கடவுளுக்கு எதிரானது.
நாட்டின் சட்ட விதிகளை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்து பதவியேற்றுஉள்ளேன். அதை நிச்சயம் செய்வேன். பிளாய்டு குடும்பத்துக்கு நியாயம் கிடைக்கும். அதேபோல், நம் சாலைகளிலும் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப் பட வேண்டும்.
உடனடி நடவடிக்கை எடுக்க நகரம் அல்லது மாகாணம் மறுத்தால், ராணுவத்தை அனுப்புவேன். அனைத்து மாகாண கவர்னர்கள், நகர மேயர்களை, உடனடியாக செயல்படும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வழக்கு பதிவு



சட்டத்தை மதிக்கும் மக்களை காப்பாற்ற வேண்டியது நம் கடமை. கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க செல்ல முடியாமல், நர்சுகள் உள்பட சுகாதாரப் பணியாளர்கள் தவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், பிளாய்டு கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரி, டெரக் சாவின் மீது, மூன்றாம் நிலை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுஉள்ளது. அடுத்த வாரத்தில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சம்பவம் நடந்தபோது, அவருடன் இருந்த, மூன்று போலீஸ் அதிகாரிகள், பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.இதற்கிடையே, வெள்ளை மாளிகைக்கு அருகே உள்ள, போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்ட சர்ச்சை, டொனால்டு டிரம்ப் பார்வையிட்டார். அது தொடர்பான, படத்தையும் வெளியிட்டார். அது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முரண்பாடான அறிக்கைகள்



உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்டு தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் முரண்பாடான தகவல்கள் வெளிவந்துள்ளன.அமெரிக்க சட்டத்தின்படி, பிளாய்டு குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதால், அவர்கள் தனியாக பிரேதப் பரிசோதனயை மேற்கொண்டனர்.
அதன்படி நடத்தப்பட்ட பரிசோதனையில், 'பிளாய்டின் கழுத்தில் ஒருவர் நெருக்கியதால், மூளைக்குச் செல்லும் நரம்புக்கான ரத்த ஓட்டம் நின்றுள்ளது.
'இதைத் தவிர அவருடைய முதுகின் மீது சிலர் அழுத்தியுள்ளனர். அதுவே, அவருடைய மரணத்துக்கு காரணம்' என, கூறப்பட்டுஉள்ளது. அதனால், போலீஸ் அதிகாரிகள் மீது அதிகபட்சமாக, கொலை குற்றத்தை பதிவு செய்ய வேண்டும் என்று, பிளாய்டு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அரசு தரப்பில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளி வந்துள்ளது. அதில், 'போலீஸ் அதிகாரி கொடுத்த அழுத்தத்தால், பிளாய்டு மரணம் நேர்ந்துள்ளது. இதை கொலையாக கருத முடியாது. அதே நேரத்தில், பிளாய்டுக்கு இதயப் பிரச்னை உள்ளது. அதைத் தவிர, வலி நிவாரணி அல்லது போதைக்காக பயன்படுத்தப்படும் சில மருந்துப் பொருட்கள் அவருடைய ரத்தத்தில் இருந்தது' என, கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பரிசோதனை அறிக்கைகளில் முரண்பாடான தகவல்கள் வெளிவந்துள்ளது, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

பேதம் கூடாது!



நம் சமூகத்தில், இன ரீதியிலான பேதம், வெறுப்புக்கு இடம் இல்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுதான் துவக்கம்; ஆனால், நாம் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு நான் ஆதரவளிக்கிறேன். அதை எங்களுடைய நிறுவனத்திலும், சமூகத்திலும் செயல்படுத்த உறுதி ஏற்கிறேன்.சத்யா நாதெள்ளா, மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி.

பொறுப்பு உள்ளது!



பிளாய்டு போன்றோரின் மரணம், அந்த மக்களின் வலியை, திட்டமிட்டு நடந்து வரும் இனபேதத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வலியை எப்படி குறைப்பது என்பதை கவனிக்கும் அதே நேரத்தில், அவர்களுடைய குரலை கேட்க மறந்து விடுகிறோம். இனியாவது அவர்களுடைய குரலை கேட்க வேண்டும். அதை உடனடியாக நிறைவேற்றுவது கடினம்; ஆனால், மிக முக்கியமானது. இந்திரா நுாயி, பெப்சிகோ முன்னாள் தலைமை செயல் அதிகாரி

மூலக்கதை