தாம்பரம் மார்க்கெட் திறக்க ஏற்பாடு; உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை

தினமலர்  தினமலர்
தாம்பரம் மார்க்கெட் திறக்க ஏற்பாடு; உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை

தாம்பரம் : வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் உள்ள கடைகளை, ஒரு நாள் விட்டு ஒரு நாள், திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஊரடங்கு விதிகளை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எச்சரிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா காரணமாக, மார்ச், 25 முதல், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தமிழகம் முழுதும் உள்ள, மார்க்கெட் பகுதிகள் மூடப்பட்டன.தொடர்ந்து, பள்ளி மைதானங்கள் மற்றும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான மைதானங்களில், தற்காலிக மார்க்கெட்டுகள் அமைக்கப்பட்டன.

சமீபத்தில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மார்க்கெட் பகுதி களை திறக்க, அனுமதி அளிக்கப்படவில்லை.இந்நிலையில், சில தினங்களாக, மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் உள்ள, காய்கறி மார்க்கெட் பகுதியை ஒட்டியுள்ள கடைகளை திறக்க வேண்டும் என, நகராட்சி அதிகாரிகளை சந்தித்து, வியாபாரிகள் சங்கத்தினர், கோரிக்கை விடுத்து வந்தனர்.

தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று முன்தினம், கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், காய்கறி மார்க்கெட்டை தவிர்த்து, கடைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறக்க பரிந்துரைக்கப் பட்டது.இதற்காக, தாம்பரம் நகராட்சி அதிகாரிகள், நேற்று, மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் உள்ள கடைகள் ஒவ்வொன்றுக்கும், நீலம் மற்றும் பச்சை வண்ண நிறங்களில், 'ஸ்டிக்கர்' ஒட்டினர்.

இக்கடைகள், விரைவில் திறக்கப்பட உள்ளன. அதில், நீல வண்ண ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கடைகள் திறக்கப்படும் நாளில், பச்சை வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கடைகள் மூடப்பட்டிருக்கும்.பச்சை வண்ண ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கடைகள் திறக்கப்படும் நாளில், நீல வண்ண ஸ்டிக்கர் ஒட்டபட்ட கடைகள் மூடப்பட்டிருக்கும்.

இது குறித்து, தாம்பரம் போலீசார், நேற்று, வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு, அறிவுரைகளை வழங்கினர். மேலும், ஊரடங்கு விதிகளை மீறாமல் செயல்பட அறிவுறுத்தியதுடன், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எச்சரித்தனர்.

மூலக்கதை