3,000த்தை நெருங்கும் ராயபுரம்; கிடுகிடுக்க வைக்கும் மண்டலங்கள்

தினமலர்  தினமலர்
3,000த்தை நெருங்கும் ராயபுரம்; கிடுகிடுக்க வைக்கும் மண்டலங்கள்

ராயபுரம் : கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில், ராயபுரம் மண்டலம், 3,000த்தை நெருங்கி வரும் நிலையில், 2,000த்தை நோக்கி, ஐந்து மண்டலங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன.

நாட்டில் தொற்று பாதித்த மாநிலங்களில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி, 23 ஆயிரத்து,495 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில், 15 ஆயிரத்த,770 பேர், சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.இது, மொத்த பாதிப்பில், 67 சதவீதமாகும். கோயம்பேடு மார்க்கெட், வெளிநாடு, மாநிலங்களில் இருந்து வருபவர்கள், மக்கள் அடர்த்தி போன்றவை தான், தொற்று எண்ணிக்கை அதிகரிக்க காரணம்.

துவக்கம் முதலே, ராயபுரத்தை, 'ரவுண்டு கட்டி' அடிக்கும் கொரோனாவால், அம்மண்டலம், தொற்று எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.அங்கு, இதுவரை, 2,935 பேர் பாதித்துள்ளதால், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் அங்கு முகாமிட்டுள்ளது.தவிர, சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கத்தில், 1,867 பேர், தண்டையார்பேட்டையில், 1,839 பேர், தேனாம்பேட்டையில், 1,770 பேர், திரு.வி.க.நகரில், 1,651 பேர், அண்ணாநகரில், 1,341 என, ஐந்து மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை, 2,000த்தை நோக்கி வேகமாக நகர்கிறது.

சென்னையின் மொத்த தொற்று பாதிப்பில், இந்த ஆறு மண்டலங்களில், 11 ஆயிரத்து,403 பேர், அதாவது, 72 சதவீதம் பேர் பாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆறு மண்டலங்களில், தொற்று குறையும் பட்சத்தில் நிலைமை கட்டுக்குள் வரலாம் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை