அமெரிக்காவில் போராட்டத்திற்கு மண்டியிட்டு ஆதரவளித்த போலீசார்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் போராட்டத்திற்கு மண்டியிட்டு ஆதரவளித்த போலீசார்

மின்னபொலிஸ்: அமெரிக்காவில் கருப்பின மக்களின் போராட்டத்திற்கு போலீசார் சிலர் மண்டியிட்டு தங்கள் ஆதரவினை தெரிவித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.


கருப்பின இளைஞரின் மரணத்திற்கு நீதி கேட்டு 7 வது நாளாக அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காலிபோர்னியா மாகாணத்தில் ஓக்லி, ப்ரெண்வுட் பகுதிகளில் நடந்த அமைதிப் போராட்டத்தின் போது போலீசார் மண்டியிட்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர். போலீசாரின் இந்த செயலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆராவாரம் செய்து வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் போலீஸ் அதிகாரி தாக்கியதில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் உயிரிழந்தார். இதையடுத்து நீதி கேட்டும், இனப்பாகுபாட்டிற்கு எதிராகவும் அமெரிக்கா முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டென்வர் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் அரசு கட்டடத்திற்கு எதிரே அமர்ந்து மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


லாஞ்ஏஞ்சல்ஸ் நகரில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாஷிங்டனில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் ஜார்ஸ் பிளாய்டின் மரணத்திற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக நியூயார்க் நகரத்தின் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தன.

இதனிடையே மக்கள் ஒன்றாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் கொரோனா தொற்று தீவிரமடையும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை