கொரோனாவால் சரியும் பிராண்டுகளின் மதிப்பு

தினமலர்  தினமலர்
கொரோனாவால் சரியும் பிராண்டுகளின் மதிப்பு

மும்பை:கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, டாப் 100 உள்நாட்டு பிராண்டுகளின் மதிப்பு, 1.88 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரியும் என, ’பிராண்டு பிசினஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது, ஜனவரி மாத ஒட்டுமொத்த பிராண்டு மதிப்பை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டிருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், உலகளவில், டாப் 500 பிராண்டுகளின் மதிப்பு, கொரோனா பாதிப்பால், ஜனவரி மாத மதிப்பிலிருந்து, 1 லட்சம் கோடி டாலர் அளவுக்கு சரியும் என தெரிவித்துஉள்ளது. இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:

கொரோனா பாதிப்பு காரணமாக, உள்நாட்டில், டாப் 100 பிராண்டுகளின் மொத்த மதிப்பு,
15 சதவீதம் வரை குறையும். இதன் பண மதிப்பு, 1.88 லட்சம் கோடி ரூபாய். ஜனவரி மாத மதிப்பிலிருந்து இந்த அளவுக்கு சரிவு ஏற்படும்.ஆய்வின் போது, டாடா குழுமம் மிகவும் மதிப்புமிக்க பிராண்டு என்ற பட்டத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.


மேலும், குழுவின் ஆடம்பர ஓட்டல் பிராண்டான, ‘தாஜ்’ நாட்டின் வலுவான பிராண்டாக உள்ளது. இதன் பிராண்டு வலிமை குறியீட்டு மதிப்பெண், 100க்கு 90.5 ஆக இருக்கிறது. இதையடுத்து, இரண்டாவது இடத்தில், எல்.ஐ. சி., உள்ளது. ரிலையன்ஸ், இன்போசிஸ், எஸ்.பி.ஐ., ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை