கொரோனாவிடம் இருந்து மீளுமா இந்தியா....! பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது: இதுவரை 5,628 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
கொரோனாவிடம் இருந்து மீளுமா இந்தியா....! பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது: இதுவரை 5,628 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,600-ஐ கடந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 96,000-ஐ கடந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை தொடங்கி தற்போது வரை 2,635 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 2 லட்சத்து ஆயிரத்து 7ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,628ஆக உயர்ந்துள்ள நிலையில் 96,534 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 98,834 பேர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 70,013 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டு 30,108 பேர் குணமடைந்து இருக்கின்றார்கள். 2,362 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று புதிதாக 1,091 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை  24,586ஆகவும் , டெல்லியில் 20,834 பேரும், குஜராத்தில் 17,217 பேரும், ராஜஸ்தானில் இன்று 171 பேர் பாதிக்கப்பட்டதால் 9,271 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை