டிரம்ப் பதிவை நீக்காத மார்க்; பேஸ்புக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தினமலர்  தினமலர்
டிரம்ப் பதிவை நீக்காத மார்க்; பேஸ்புக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

வாஷிங்டன்: கொரோனா தாக்கம் ஒருபுறம் உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்க, மறுபுறம் அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் ப்ளாயிட் படுகொலையை அடுத்து கருப்பின மக்கள் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இது உலக நாடுகளை அமெரிக்கா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாக தனது டுவிட்டர், இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் ஜார்ஜ் பிளாயிட் கொலை குறித்து சர்ச்சைப் பதிவிட்டது விவாதத்துக்குள்ளாகியது. போராட்டம் என்ற பெயரில் கருப்பின மக்கள் கடைகளை சூறையாடினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என அவர் பதிவிட்டு இருந்தார்.


இந்த பதிவை டுவிட்டர் தங்கள் தளத்தின் வரைமுறைக்கு எதிரானது எனக் கூறி நீக்கியது. ஆனால் பேஸ்புக் இதனை நீக்கவில்லை. இதனால் அதன் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் மீது விமர்சங்கள் எழுந்தன. இதனையடுத்து அவர் டிரம்ப் பதிவை பேஸ்புக் நீக்காததன் காரணம் குறித்து விளங்கினார். இந்த பதிவு அரசின் அறிவிப்பாகவே உள்ளதெனவும் அது பேஸ்புக் சட்டத்திட்டங்களுக்கு எதிரானதாகத் தான் கருதவில்லை எனவும் மார்க் முன்னதாகத் தெரிவித்து இருந்தார். தற்போது பேஸ்புக்கில் பணியாற்றும் டிரம்ப்பின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள் சிலர் மார்க்கின் இந்த முடிவை எதிர்த்துள்ளனர். இதனால் இவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டிரம்ப் இட்ட பதிவு நிறவெறியின் வெளிப்பாடு. இதனை பேஸ்புக் நீக்கி இருக்கவேண்டுமே அன்றி நியாயப்படுத்தக் கூடாது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் கருத்தை மதித்த பேஸ்புக் நிர்வாகம், அவர்களது வேலை நிறுத்தத்தை எதிர்க்கவோ சம்பளத்தை குறைக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மார்க் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

மூலக்கதை