டிரம்ப் விருப்பம்: கைவிரித்த கனடா பிரதமர்

தினமலர்  தினமலர்
டிரம்ப் விருப்பம்: கைவிரித்த கனடா பிரதமர்

ஒட்டாவா: ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்க இருப்பதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்பின் விருப்பத்தை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாக உள்ள ஜி-7 அமைப்பில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தாண்டு ஜி-7 உச்சி மாநாட்டை அமெரிக்கா நடத்த உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஜூன் மாதம் திட்டமிடப்பட்டிருந்த ஜி-7 உச்சி மாநாட்டை ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டிரம்ப் விடுத்த அழைப்பை ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நிராகரித்தார்.

செப்டம்பரில் மீண்டும் ஜி-7 உச்சி மாநாட்டை நடத்த முயற்சி செய்ய இருப்பதாக கூறிய டிரம்ப், உலகில் என்ன நடக்கிறது என்பதை ஜி 7 அமைப்பு சரியாக பிரதிபலிப்பதாக தான் நினைக்கவில்லை. இது காலாவதியான நாடுகளின் கூட்டமைப்பு என்றும், ரஷ்யா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளையும் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். ஜி-7 மாநாடு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் ஆலோசனை நடத்தியிருந்ததாக திங்களன்று கிரெம்ளின் மாளிகை வட்டாரம் உறுதிப்படுத்தி இருந்தது.

இந்நிலையில், கனடா தலைநகர் ஒட்டாவாவில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: ‛பல ஆண்டுகளுக்கு முன் கிரிமீயா நாட்டின் மீது படையெடுத்ததற்காக ரஷ்யா, ஜி-7 கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட்டது. தொடர்ச்சியாக சர்வதேச விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அவமதித்ததுடன், அவதூறு பரப்பியதால் தான் ரஷ்யா வெளியேற்றப்பட்டது. ரஷ்யா தொடர்ந்து வெளியே இருக்கும். உச்சி மாநாட்டை தொடர்ந்து நடத்துவதும், நெருக்கடியான இந்த நேரத்தில் நாங்கள் சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கிறோம் என்பதையும் உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியம்'. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 2014ம் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கிரிமீயா மீது படையெடுத்து கைப்பற்றியதுடன், தனது நாட்டின் ஒரு பகுதி என அறிவித்ததால் ரஷ்யா, ஜி 8 அமைப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை