அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வால் நாளை கரையை கடக்கிறது ‘நிசார்கா’ புயல்: கொரோனாவுக்கு மத்தியில் மும்பைக்கு ‘ரெட் அலர்ட்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வால் நாளை கரையை கடக்கிறது ‘நிசார்கா’ புயல்: கொரோனாவுக்கு மத்தியில் மும்பைக்கு ‘ரெட் அலர்ட்’

மும்பை: அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர ‘நிசார்கா’புயலாக மாறி நாளை கரையை கடக்கிறது. அதனால், கொரோனாவுக்கு மத்தியில் மும்பைக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக உருவெடுத்து, வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே நாளை (ஜூன் 3) கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்விரு மாநிலங்களின் கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், ‘அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இது, செவ்வாய்க்கிழமைக்குள் (இன்று) புயலாக தீவிரமடைந்து, வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே புதன்கிழமை (நாளை) மாலை அல்லது இரவில் கரையை கடக்கும்’ என்று கூறியுள்ளது.

‘நிசார்கா’ என்று அழைக்கப்படும் இந்த புயல் மகாராஷ்டிராவின் ராய்காட்டில் உள்ள ஹரிஹேரேஷ்வர், டாமன் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மும்பை, தானே, நவிமும்பை, உல்ஹாஸ்நகர், பட்லாபூா், அம்பர்நாத் உள்ளிட்ட நகரங்களில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

மும்பையில் கனமழை பெய்யும் என்பதால், புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 105 முதல் 110 கி. மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.



இதனால், மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, குஜராத் முதல்வர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 11 குழுக்கள், மகாராஷ்டிரத்தில் 10 குழுக்கள், மற்ற இடங்களில் 2 குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்துவிழுந்தன.

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவின் இயக்குநர் எஸ். என். பிரதான் கூறுகையில், ‘நிசார்கா புயலின் சூறாவளி காற்று, 90-100 கி. மீ வேகத்தில் வீசும் என்று எதிர்பார்க்கிறோம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரு மாநிலங்களின் (மகாராஷ்டிரா மற்றும் குஜராத்) கடலோரப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றத் தொடங்க உள்ளோம்’ என்றார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியை மகாராஷ்டிரா, குஜராத் அரசுகள் எதிர்கொண்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நேரத்தில் மின் துண்டிப்பு ஏற்படாமல் இருக்க, இருமாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை