மத்திய ஆயுத போலீஸ் படை கேன்டீனில் 1,026 வெளிநாட்டு பொருட்கள் விற்க தடை: அமலுக்கு வந்த சில மணி நேரத்தில் வாபஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய ஆயுத போலீஸ் படை கேன்டீனில் 1,026 வெளிநாட்டு பொருட்கள் விற்க தடை: அமலுக்கு வந்த சில மணி நேரத்தில் வாபஸ்

டெல்லி: மத்திய ஆயுத போலீஸ் படை கேன்டீன்களில் 1,026 வெளிநாட்டு பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டது. இத்திட்டம் அமலுக்கு வந்த சில மணி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கட்டுப்பட்ட 1,700 மத்திய போலீஸ், மத்திய ஆயுத போலீஸ் படை (சிஏபிஎப்) கேன்டீன்கள் செயல்படுகின்றன. சிஆர்பிஎப், பிஎஸ்எப், ஐசிபிபி, சிஎஸ்ஐஎப், என்எஸ்ஜி, எஎஸ்எஸ்பி ஆகிய படைப்பிரிவில் பணியாற்றும் 10 லட்சம் பேர் மற்றும் 50 லட்சம் குடும்பங்கள் இந்த கேன்டீனில் பொருட்களை வாங்குகின்றன.



கடந்த 13ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் நாட்டில் உள்ள 1,700 மத்திய போலீஸ், சிஏபிஎப் கேன்டீனுக்கு கடிதம் எழுதியிருந்தது. இதில், ‘வரும் ஜூன் 1ம் தேதி (நேற்று) முதல் கேன்டீன்களில் உள்நாட்டில் தயாரித்த (சுதேசி) பொருட்களை மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும்.

மற்ற பொருட்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்படுகிறது’ எனவும் அதற்கான வரையறையையும் தெரிவித்திருந்தது. அதாவது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்கலாம்.

ஆனால் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்கக்கூடாது எனத் தெரிவித்திருந்தது.

இதனால் ஸ்கெச்சர்ஸ், பெராரோ, ரெட்புல், விக்டோரிநாக்ஸ், சபிலோ ஆகிய நிறுவனங்களின் பொருட்கள் விற்பனைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களில் டாபர் நிறுவனம், விஐபி இன்டஸ்ட்ரீஸ், யுரேகா போர்ப்ஸ், ஜாக்குவார், ஹெச்யுஎல், ஹார்லிக்ஸ், அபாட் ஹெல்த்கேர், பிலிப்ஸ், பானசோனிக், கோல்கேட் பாமாலிவ், கில்லெட், அடிடாஸ், நெஸ்லே, டைமெக்ஸ், சாபாரி சாம்சோனைட், டிடிகே பிரஸ்டிஜ், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களின் பல்வேறு பொருட்கள் விற்பனைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன.

மேலும், சாக்லேட்கள், கேமராக்கள், மைக்ரோஓவன், செருப்புகள், பிராண்டட் ஷூ, போலராய்ட் கேமிரா என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் நீக்கப்பட்டன.

கடந்த மாதம் 13ம் தேதி பிறப்பித்த உத்தரவு நேற்று நடைமுறைக்கு வந்த சில மணிநேரத்தில் அந்த உத்தரவை நிறுத்திவைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், கேன்டீன் உறுப்பினர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. விரைவில் திருத்தப்பட்ட உத்தரவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிஆர்பிஎஃப் இயக்குநரும், வாரிய தலைவருமான ஏ. பி. மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சில தயாரிப்பு பொருட்களை நீக்குவது தொடர்பாக மே 29 அன்று கேந்திரியா போலீஸ்  கல்யாண் பண்டார் வெளியிட்ட பட்டியல், தலைமை நிர்வாக அதிகாரி மட்டத்தில்  தவறாக வழங்கப்பட்டது. அதனால், இந்த பட்டியல்  திரும்பப் பெறப்பட்டுள்ளது.

குறைபாடுகளை களைவது தொடர்பான நடவடிக்கைகள்  தொடங்கப்பட்டுள்ளன’ என்றார்.

.

மூலக்கதை