கொரோனா வைரஸ் உலகை உலுக்கி வரும் நிலையில் காங்கோவில் ‘எபோலா’ வைரஸ் தாக்கி 4 பேர் பலி: தொற்றை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வைரஸ் உலகை உலுக்கி வரும் நிலையில் காங்கோவில் ‘எபோலா’ வைரஸ் தாக்கி 4 பேர் பலி: தொற்றை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காங்கோ: கொரோனா வைரஸ் உலகை உலுக்கும் நிலையில் காங்கோவில் ‘எபோலா’ வைரஸ் தாக்கி 4 பேர் பலியாகி உள்ளனர். நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி இன்று மக்களை முடக்கி உள்ள நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் நோய் தொற்று ேவகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று கொரோனா வைரஸ் தொற்றை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

இதனை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா பரவல் இருப்பதால், தொடர்ந்து சுகாதார அவசர நிலைகளை கண்காணித்து ஆலோசனைகளை வெளியிட்டுள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, காங்கோ ஜனநாயக குடியரசு அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘ஈக்வெட்டூர் மாகாணத்தில் உள்ள வங்காட்டா சுகாதார மண்டலத்தில் எபோலா வைரஸ்  நோய் தொற்று பரவி வருகிறது. வங்காட்டாவில் இதுவரை ஆறு ேபர் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் நான்கு பேர் இறந்துவிட்டனர். மற்ற இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



மேற்கண்ட ஆறு பேரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அவர்களுக்கு எபோலா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஆப்பிரிக்காவின் உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் டாக்டர் மாட்ஷிடிசோ மொயெட்டி கூறுகையில், ‘கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள சவாலான நிலையில், எபோலா பரவல் நடக்கிறது.

இதனை கட்டுப்படுத்த தேசிய சுகாதார திறனை வலுப்படுத்தி வருகிறோம். ஆப்பிரிக்கா சிடிசி மற்றும் பிற கூட்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறோம்.

உள்ளூர் நிலைமையை கண்டறிய உலக சுகாதார அமைப்பு குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய தொற்று பரவல் அண்டை நாடுகளுக்கு பரவாமல் இருக்க நாங்கள் விரைவாக செயல்பட்டு வருகிறோம்.

ஆப்பிரிக்க நாட்டின் ஒரு விலங்கு நீர்த்தேக்கத்தில் வைரஸ் உருவாகி இருக்கலாம். காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலாவின் புதிய வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

கடந்த 1976ம் ஆண்டில் எபோலா வைரஸ் தொற்று முதன்முறையாக காங்கோ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், இதுவரை காங்கோவில் 11வது முறையாக எபோலா வைரஸ் பரவல் தொடங்கி உள்ளதாக சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


.

மூலக்கதை