நீரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

தினமலர்  தினமலர்
நீரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

லண்டன்: வங்கி கடன் மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள பிரபல தொழிலதிபர் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, வைர வியாபாரி நீரவ் மோடி மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தன. இந்த நிலையில், பிரிட்டனுக்கு, அவர் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி, அழைத்து வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பிரிட்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதி வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு, பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் இந்திய பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், நீரவ் மோடி விரைவில் நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூலக்கதை