ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்க அரசு ஆலோசனை

தினமலர்  தினமலர்
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்க அரசு ஆலோசனை

சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் இன்று தலைமை செயலர் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்குதல் அதிபயங்கரமாக உள்ளது. பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை தினமும் பல மடங்கு அதிகரித்தபடி உள்ளது. நேற்று ஒரே நாளில் 7௯௮௭ பேருக்கு நோய் கொரோனா உறுதியானது.

சென்னையில் மட்டும் 2558 பேருக்கு கொரோனா உறுதியானது.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, தஞ்சாவூர், துாத்துக்குடி, திருப்பூர் என பல மாவட்டங்களிலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.


விழிப்புணர்வு இல்லை


மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல மாவட்டங்களில் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனையில் இடம் கிடைப்பது சிரமமாகி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

எனினும் பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. பொது இடங்களில் முகக் கவசம் இல்லாமல் செல்வது சகஜமாக உள்ளது. எனவே கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சனி, ஞாயிறு முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகம் முழுதும் ஏப்., 30 நள்ளிரவு 12:00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

நடவடிக்கைகள்


இந்நிலையில் நோய் பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முடிவு செய்வதற்காக இன்று காலை தலைமை செயலகத்தில் தலைமை செயலர் ராஜிவ்ரஞ்சன் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்ததினார்.

இக்கூட்டத்தில் கொரோனாவை தடுக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை