நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமான நிலையில் மேற்குவங்கத்தில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு...மீதமுள்ள 3 கட்டத்தை ஒரே கட்டமாக நடத்த ஆணையம் மறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமான நிலையில் மேற்குவங்கத்தில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு...மீதமுள்ள 3 கட்டத்தை ஒரே கட்டமாக நடத்த ஆணையம் மறுப்பு

கொல்கத்தா: நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில், மேற்குவங்கத்தில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள 3 கட்டத்தை ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதால், கொரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் 4 கட்ட வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் நாளை 6 மாவட்டங்களில் உள்ள 45 இடங்களில் (294 தொகுதிகளில் 135 இடங்களுக்கு வாக்குப்பதிவு முடிந்தது) 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த கட்டத்தில் 39 பெண்கள் உட்பட 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முன்னதாக நான்காவது கட்ட வாக்குப் பதிவின்போது கூச்  பெஹார் மாவட்டத்தில் நடந்த வன்முறையின் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது,

அதன் தொடர்ச்சியாக வாக்குப்பதிவுக்கு முந்தைய பிரசார காலம் 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரம் வரை  தடை நீடித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. முன்னதாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பாஜக தலைவர் ஜே. பி. நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் வடக்கு 24 பர்கானா மாவட்டத்திலும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஜல்பைகுரி மாவட்டத்திலும், டார்ஜிலிங் மாவட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா ஆகியோரும் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். நாளை நடைபெறும் 5ம் கட்ட வாக்குப்பதிவில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்று மேலும் அதிகரிப்பதைத் தடுக்க, மீதமுள்ள மூன்று கட்டத் தேர்தல்களையும் சேர்த்து ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘ஏப்.

22, 26, 29 ஆகிய தேதிகளில் நடைபெற வேண்டிய மூன்று கட்டத் தேர்தல்களையும் சேர்த்து ஒரே கட்டமாக தேர்தலை நடத்தும் திட்டம் எதுவும் தேர்தல் ஆணையத்திடம் இல்லை’ என்று தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் முடிவால், கொரோனா அச்சத்திற்கு மத்தியில் மேற்குவங்கத்தில் திட்டமிட்டபடி வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளது.இதற்கிடையே, மேற்குவங்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில், இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அம்மாநில தேர்தல் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில், அடுத்து வரும் 3 கட்ட தேர்தலில் தலைவர்களின் பிரசாரம் கொரோனா விதிமுறைகளின்படி நடத்துதல் உள்ளிட்ட கட்டுபாடுகள் அதிகமாக இருக்கும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்குவங்க மாநிலத்தை பொருத்தமட்டில் நேற்று ஒரே நாளில் 6,769 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 6,36,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ேநற்று மட்டும் கொரோனாவால் 22 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 10,480 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மேற்குவங்கம் 8வது இடத்தில் உள்ளது.

அம்மாநிலத்தில் தேர்தல் 8 கட்டமாக நடப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக பிரசாரத்திற்கு செல்கின்றனர். தலைவர்களும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதால் மகாராஷ்டிராவை போன்று மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பின் கொரோனாவின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2 எம்பி, 13 எம்எல்ஏ பதவிக்கு தேர்தல்

ஆந்திராவில் திருப்பதி மற்றும் கர்நாடகாவில் பெல்காம் உள்ளிட்ட இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும், பத்து மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இடைத் தேர்தலுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ராஜஸ்தானில் மூன்று, கர்நாடகாவில் இரண்டு மற்றும் குஜராத், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, தெலங்கானா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மம்தா பானர்ஜி மீது வழக்கு

மேற்குவங்கத்தின் கூச் பெஹாரில் உள்ள பாஜக சிறுபான்மை பிரிவின் மாவட்டத் தலைவர் சித்திகி அலி மியா, மாதபங்கா காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ‘பனரேஸ்வரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும்படி பேசினார். அவரது உரையின் வீடியோ கிளிப்பையும் மனுவுடன் இணைத்துள்ளேன்.

மம்தா பானர்ஜியின் ஆத்திரமூட்டும் பேச்சால், 4ம் கட்ட வாக்குப்பதிவின் போது கிராம மக்களில் சிலர், பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்புப் படையினரின் ஆயுதங்களை பறிக்க முயன்றனர். அதனால் ஏற்பட்ட அசம்பாவிதங்களால் 4 பேரின் மரணத்திற்கு வழிவகுத்தது.

எனவே, 4 பேரின் மரணத்திற்கு மம்தா பானர்ஜியே பொறுப்பு என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார். இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார், முதல்வர் மம்தாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திலீப் கோஷ் பிரசாரத்துக்கு தடை

மேற்குவங்கத்தில் நான்காம் கட்டத் தேர்தலின் போது சிதால்குசியில் ஏற்பட்ட வன்முறையில் பாகாப்புப் படையினர் சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ், ‘சிலர் வரம்புகளை மீறினால், சிதால்குச்சியில் ஏற்பட்ட சம்பவத்தைப்போன்று பல இடங்களில் நடைபெறும்’ என்றார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது.

அதையடுத்து சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விளக்கமளிக்க திலிப் கோஷுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், ‘திலீப் கோஷ் ஏப்.

15 மாலை 7 மணி முதல் மறுநாள் (இன்று) 7 மணி வரை 24 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

.

மூலக்கதை