தலைமை செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை: தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு...இரவு நேர ஊரடங்கு அறிவிப்பா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
தலைமை செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை: தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு...இரவு நேர ஊரடங்கு அறிவிப்பா?

சென்னை: தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று காலை ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் இரவு நேர ஊடரங்கு அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அது எதிர்பார்த்த அளவிற்கு பலனளிக்கவில்லை. தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

சென்னையில் அதிகபட்சமாக 2,500ஐ தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு அதிகாரிகள் திகைத்துபோய் உள்ளனர். அதேநேரம் இனி தமிழகத்தில் ஊரடங்கு அறிவித்தால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பதால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இதில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தற்போது உள்ள சூழலில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதே நேரம் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.

குறிப்பாக, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்க வாய்ப்புள்ளது.

.

மூலக்கதை