வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஓட்டுபெட்டிகளை மாற்ற முயற்சிப்பதாக புகார்: கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தவும் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஓட்டுபெட்டிகளை மாற்ற முயற்சிப்பதாக புகார்: கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தவும் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மே 2ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று பிற்பகல் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

மேலும், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஓட்டுப்பெட்டிகளை மாற்ற முயற்சிப்பதாக எழுந்த புகார் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் மொத்தம் 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தமிழகத்தில் மட்டும் 72. 81 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகப்பட்சமாக கரூரில் 83. 96 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னையில் 59. 15 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
ஏப்ரல் 6ம் தேதி இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும் சீல் வைக்கப்பட்டு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள ஸ்டாங் ரூமில் மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் துணை ராணுவ வீரர்கள், தமிழக போலீசார் மற்றும் அரசியல் கட்சி ஏஜென்டுகள் கண்காணித்து வருகிறார்கள். அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில், மயிலாப்பூரில் உள்ள ராணி மேரி கல்லூரி, நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி, கிண்டியில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில்  ராம் வித்யா மந்தீர் மெட்ரிகுலேசன் பள்ளி, ராம் கல்லூரி வளாகத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பதிவான வாக்கு இயந்திரங்கள் தாம்பரம் சென்னை கிறிஸ்துவ கல்லூரி, அசன் என்ஜீனியரிங் கல்லூரி, ஏசிடி காலேஜ் ஆப் என்ஜினீயரிங் கல்லூரியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் யூனிவர்சிட்டி காலேஸ் ஆப் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இப்படி, தமிழகம் முழுவதும் 75 மையங்களில் அந்தந்த மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளை மாற்றுவதற்கு ஆளுங்கட்சி தரப்பினர் முயற்சி செய்வதாக திமுக மற்றும் வேறு சில கட்சி நிர்வாகிகள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் புகார் அளித்துள்ளனர். திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரில் ராணுவம், போலீஸ் பாதுகாப்பையும் மீறி நள்ளிரவு நேரத்தில் மிகப்பெரிய கன்டெய்னர் லாரிகள் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி சுற்றி வருவதாகவும், ஹைடெக் முறையை பயன்படுத்தி வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை வேறு கட்சிக்கு மாற்ற ரகசிய திட்டம் தீட்டி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு கன்டெய்னர் லாரிகள் நள்ளிரவு நேரத்தில் ஏன் வருகிறது? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 12 நாட்கள் உள்ளது.

அதற்குள் ஏதாவது முறைகேடுகளில் ஈடுபட திட்டமிட்டு இதுபோன்ற புதிய புதிய நடவடிக்கைகளில் சிலர் இறங்கி உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் 24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு இயந்திரங்களை கண்காணித்து வருகிறார்கள்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றுள்ள நிலையில், புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றுள்ளார். இதையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று பிற்பகல் 2. 30 மணிக்கு தமிழகத்தில் வருகிற மே 2ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்) கலந்து கொண்டனர். இந்த கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது.

இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் மே மாதம் 2ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இதற்கு முன் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.



வாக்கு எண்ணும் பணியில் யார் யாரை நியமிப்பது, வாக்கு எண்ணும் மையங்களுக்குள் மே 2ம் தேதி யார் யாரை அனுமதிப்பது, ஒவ்வொரு சுற்று தேர்தல் முடிவுகளை எப்படி வெளியிட வேண்டும் என்பது குறித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்டாங் ரூமில் தற்போது அளித்துள்ள 3 அடுக்கு பாதுகாப்பை மீறி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் வரும் நாட்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும்.

இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் மர்ம வாகனங்கள் மற்றும் மர்ம நபர்கள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தமிழக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை