கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..! அதிகாரிகள் இரங்கல்

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..! அதிகாரிகள் இரங்கல்

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 68.அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று இரவுதான் உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை காலமானார். 1974-ம் ஆண்டு பிஹார் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான ரஞ்சித் சின்ஹா தனது பதவிக் காலத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளை விசாரித்துள்ளார். இந்தோ-திபெத்தியன் படை, ரயில்வே பாதுகாப்புப் படை ஆகியவற்றின் தலைவராகவும் ரஞ்சித் சின்ஹா பணியாற்றி, பாட்னாவில் சிபிஐ அமைப்பின் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின் 2012-ம் ஆண்டு காங்கிரஸ் அரசில் சிபிஐ இயக்குநராக ரஞ்சித் சின்ஹா நியமிக்கப்பட்டார். 2013-ம் ஆண்டு சிபிஐ இயக்குநராக ரஞ்சித் சின்ஹா இருந்தபோது, உச்ச நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார். கூண்டுக்குள் இருக்கும் கிளி, எஜமானார் பேச்சைக் கேட்பது போன்று சிபிஐ செயல்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் விமர்சித்தது. தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்த வழக்கில் சின்ஹா தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் ரஞ்சித் சின்ஹா மீது 2017-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. சிபிஐ இயக்குநராக சின்ஹா இருந்தபோது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்குடன் கடும் மோதலில் ஈடுபட்டார். அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை முடிக்க மறுத்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை