'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா?

தினமலர்  தினமலர்
கர்ணன் படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா?

சென்னை: கர்ணன்' பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி மிரட்டினாரா, இல்லையா என்ற விவாதம், சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகி உள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், கொடியங்குளம் கிராமத்தில் நடந்த கலவரத்தை மையமாக வைத்து உருவான, 'கர்ணன்' படத்தில், தி.மு.க., குறித்து தவறான கருத்து இடம் பெற்றுள்ளதாக, உதயநிதி கூறியுள்ளார். படத்தில் அச்சம்பவம், தி.மு.க., ஆட்சியில் நடந்ததாக கூறப்படுவதாக சர்ச்சை எழுந்தது. உண்மையில் அந்த சம்பவம், அ.தி.மு.க., ஆட்சியில் நடந்ததை, தி.மு.க., வினர் சுட்டிக்காட்டினர்.

இது குறித்து, உதயநிதி, 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது:'கர்ணன்' தவிர்க்க முடியாத படம் என்பதில், மாற்றுக் கருத்தில்லை. 1995ல் நடந்த கொடியன்குளம் கலவரம், 1997ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை, தயாரிப்பாளர், இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் திருத்திக் கொள்வதாக உறுதியளித்து, சரி செய்துள்ளனர். படைப்பிலுள்ள பிழையை சுட்டிக் காட்டுகையில், அதை திருத்திக் கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம், 1995ல், அ.தி.மு.க., ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும், 90களின் இறுதியில் என, திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும், அதிருப்தி குரல்கள் எழுகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கருணாநிதியின் பங்களிப்புகள், காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து, ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திரையுலகை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'கருத்து சுதந்திரம் குறித்து அதிகம் பேசும் தி.மு.க.,வினர், ஒரு கதையை படமாக பார்க்காமல், ஆராய்ந்து, எதற்கு குற்றம் கண்டு பிடிக்க வேண்டும். ஆட்சிக்கு வரும் முன்னரே, திரைத்துறையை கையில் எடுக்க, உதயநிதி திட்டமிடுகிறாரா?' என, கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மூலக்கதை