தீவிரமடையும் கொரோனா தொற்று!: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..!!

தினகரன்  தினகரன்
தீவிரமடையும் கொரோனா தொற்று!: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..!!

டெல்லி: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசின் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் நோயாளிகளின் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பினாலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதற்கு ஒரே தீர்வு கொரோனா தடுப்பு மருந்து என மருத்துவ விஞ்ஞானிகள் கூறியதை அடுத்து தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரிக்க மராட்டிய அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிதீவிரமடைந்துள்ள நிலையில், மராட்டிய மாநிலத்தில் தான் அதிகளவில் பரவி வருகிறது. ஆனால் கொரோனா பரவலை தடுத்து நிறுத்த மத்திய அரசு போதிய அளவில் தடுப்பூசிகளை விநியோகிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய மராட்டிய அரசு, தடுப்பூசி போடும் மையங்களை மூடி வந்தது. இதைத்தொடர்ந்து, மராட்டியத்தில் கோரிக்கையை ஏற்று பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள அம்மாநிலத்தில் உள்ள ஹாஃப்கைன் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியிருக்கிறது. உள்நாட்டு தொழில்நுட்ப பரிமாற்றத்தின் அடிப்படையில் பாரத் பயோடெக் கோவாக்சின் கொரோனாயை தயாரிக்க மத்திய அரசும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகமும் மும்பையில் உள்ள ஹாஃப்கைன் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக மராட்டிய முதலமைச்சரின் பிரத்யேக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மராட்டிய அரசின் கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை