இந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..!!

தினகரன்  தினகரன்
இந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..!!

டெல்லி: இந்தியாவின் கடந்த மார்ச் மாதம் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்புக்கு, கச்சா எண்ணெய் மற்றும் உலோகங்களின் விலை உயர்ந்தது காரணமாக அமைந்தது. இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 2020 மற்றும் மார்ச் 2021ம் ஆண்டுகளை ஒப்பிடுகையில் நாட்டின் வருடாந்திர பணவீக்க அளவீடு 7.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மொத்தவிலை பணவீக்கம் 4.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் காரணமாக போக்குவரத்தை நம்பி இருக்கும் அனைத்து பொருட்களின் விளையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மார்ச் மாதத்தில் உணவு பொருட்கள் மீதான பணவீக்கம் 3.24 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் பருப்பு வகைகள் மீதான பணவீக்கம் 13.14 சதவீதமும், பழங்கள் மீதான பணவீக்கம் 16.33 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் நெல் ஆகியவற்றாலும்  விலை அதிகரித்துள்ளது. இந்த திடீர் உயர்வுக்கு காரணமாக இருந்த எரிபொருள் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கமும் 10.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம், 4 மாதங்களில் இல்லாத வகையில் 5.55 சதவீதமாக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த பணவீக்க உயர்வு உற்பத்தியாளர்களின் விலை நிர்ணய சக்தியை மீட்டெடுப்பதை காட்டுகிறது. அத்துடன் மத்திய அரசின் நடவடிக்கைகளால் பொருளாதாரம் மீண்டு வருவதன் அறிகுறியாக கருதப்படுகிறது.

மூலக்கதை