பாடம் கற்றுக் கொண்டதால் பயமில்லை நுகர்பொருள் துறையினர் நம்பிக்கை

தினமலர்  தினமலர்
பாடம் கற்றுக் கொண்டதால் பயமில்லை நுகர்பொருள் துறையினர் நம்பிக்கை

புதுடில்லி:புதிதாக ஊரடங்கு உத்தரவுகளை மத்திய – மாநில அரசுகள் பிறப்பித்தாலும், வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல், இம்முறை செயல்பட முடியும் என, நுகர்வோர் பொருட்கள் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம், கடந்த கால அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்ட பாடம் தான் என்றும் பலர் தெரிவித்து உள்ளனர். கொரோனா தாக்கம் அதிகரித்திருப்பதை அடுத்து, சில இடங்களில் ஊரடங்கு உத்தரவுகளும்; வேறு பல இடங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டை போல, நுகர்வோர் பொருட்கள் வினியோகத்தில் பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்த கேள்விகள் அனைவரிடத்திலும் எழுந்துள்ளன.

இது குறித்து, பார்லே நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகிப்பவர்களில் ஒருவரான, மயாங்க் ஷா கூறியதாவது:கடந்த ஆண்டு அனுபவத்திலிருந்து, ஏராளமானவற்றை நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம். எனவே, இந்த ஆண்டில் சிக்கல்கள் ஏற்பட்டால், அவற்றை நாங்கள் நன்றாகவே சமாளித்து விடுவோம். இப்படிப்பட்ட பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது அனைத்து நிறுவனங்களும் நன்றாக அறிந்து கொண்டுள்ளன.

நிறுவனங்கள் மட்டுமின்றி; அரசாங்கங்களும் கொரோனா பரவல் காலத்தில் என்ன மாதிரி யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து, கடந்த கால அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டிருக்கின்றன. உள்ளூர் நிர்வாக இயந்திரங்கள் வரை அனைத்து தரப்பினரும் அனுபவ பாடம் பெற்றிருப்பதால், இம்முறை மக்களுக்கு தேவைப்படும் பொருட்கள் வினியோகத்தில் எந்த சிக்கல்களும் எழாது என, உறுதியாகச் சொல்லலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

வினியோக தரப்பில் நம்பிக்கையுடன் இருப்பினும், தயாரிப்பு பிரிவில் சில பிரச்னைகள் எழக்கூடும் என, சற்று அச்சத்தில் பல நிறுவனங்கள் இருக்கின்றன.குறிப்பாக, இரண்டாம் கட்ட பாதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில், வேலை செய்வதற்கான ஆட்களுக்கு பஞ்சம் ஏற்படக் கூடும் என அஞ்சுகின்றன.பலர் பாதிப்பு அதிகரிக்கும் எனும் பட்சத்தில், கடந்த முறை போல சிக்கிக் கொள்ளாமலிருக்க, பரவல் அதிகரிக்கும்போதே தங்கள் ஊர்களுக்கு சென்றுவிடும் எண்ணத்தில் இருக்கிறார்கள்.

எனவே வேலையாட்கள் எண்ணிக்கை குறையும் போது, தயாரிப்பும் குறைந்து, தேவையை நிறைவேற்ற இயலாத சூழல் உருவாகலாம். மேலும், இந்த துறையில் பல பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியாது என்பதால், முன்கூட்டியே அதிக, ‘ஸ்டாக்’ வைத்துக் கொள்ளவும் முடியாது. குறிப்பாக, உணவு சம்பந்தப்பட்ட பொருட்களை அதிகளவில் தயாரித்து வைக்கவும் முடியாது.இருப்பினும், நிறுவனங்கள் கடந்த காலத்தை போல அல்லாமல், பிரச்னை ஏற்படின், சமாளித்துவிட முடியும் என, நம்பிக்கையுடன் இருக்கின்றன.

மூலக்கதை