மொத்த விலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

தினமலர்  தினமலர்
மொத்த விலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், 8 ஆண்டுகளில் இல்லாத வகையில், 7.39 சதவீதமாக அதிகரித்துள்ளது.இந்த அதிகரிப்புக்கு, கச்சா எண்ணெய் மற்றும் உலோகங்களின் விலை உயர்ந்தது காரணமாக அமைந்தது.

இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளதாவது:கடந்த மார்ச் மாதத்தில், 8 ஆண்டுகளில் இல்லாத வகையில், மொத்த விலை பண வீக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு முன் கடந்த, 2012ம் ஆண்டு அக்டோபரில் இது, 7.40 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு இப்போது மார்ச்சில், 7.39 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

இதுவே, கடந்த பிப்ரவரி மாதத்தில், 4.17 சதவீதமாகவும்; கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 0.42 சதவீதமாகவும் இருந்தது.கடந்த, 3 மாதங்களாக மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச்சில், உணவு பொருட்களுக்கான பணவீக்கம் பருப்பு வகைகள், பழங்கள், நெல் ஆகியவற்றால் விலை அதிகரித்துள்ளது.

அதேசமயம், காய்கறிகள் விலை குறைந்துள்ளது.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.கடந்த மார்ச்சில், சில்லரை விலை பணவீக்கம், 4 மாதங்களில் இல்லாத வகையில், 5.52 சதவீதமாக அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை