இன்று வெற்றி பெறப்போகும் ‘கிங்’ யார்?

தினகரன்  தினகரன்
இன்று வெற்றி பெறப்போகும் ‘கிங்’ யார்?

மும்பை: மும்பை வான்கடே அரங்கில் இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் களம் காண உள்ளன. பெயர் மாற்றத்துடன், அதிரடி ஆட்டத்தால் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற உற்சாகத்துடன் பஞ்சாப் இன்று 2வது ஆட்டத்தை எதிர்கொள்கிறது. பொறுப்பான கேப்டனாக  ராகுல், யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கேல், அதிரடி தீபக்  ஹூடா, வேகம் முகமது ஷமி, இளம் வீரர் அர்ஷ்தீப்  சிங், தமிழக வீரர் ஷாருக்கான் ஆகியோர்  அணிக்கு மிகுந்த  நம்பிக்கையை உருவாக்கியுள்ளனர். கூடவே நிகோலஸ் பூரன், முருகன் அஷ்வின், ைஜ ரிச்சர்ட்சன்,  ரிலே மெர்டித் ஆகியோரும் இருப்பதால் பஞ்சாப் வலுவான அணியாக திகழுகிறது. கூடவே டேவிட் மாலன், கிறிஸ் ஜோர்டன், பேபியன் ஆலன், இஷான் பொரேல் ஆகியோரும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ஆனால் முதல் ஆட்டத்தில் களம் கண்ட அதே அணி 2வது ஆட்டத்திலும் மாற்றமின்றி களமிறங்கும் வாய்ப்பே அதிகம்.‘இந்த முறை  சாதிப்போம்’ என்று ஓரே ஒரு  மாற்றத்துடன் களம் கண்ட  தோனி தலைமையிலான சென்னைக்கு முதல் ஆட்டத்தில் ஏமாற்றம்தான் கிடைத்தது.  அதே பழைய படையுடன்தான்  களம் கண்ட தோனிக்கு ‘ஸ்பார்க்’ தெரியவில்லை. எனினும்  இந்த ஆண்டு மீண்டும் களம் கண்ட ‘சின்ன தல’ ரெய்னா பொறுப்புடன் விளையாடி நம்பிக்கை அளிக்கிறார். அனுபவம்  அம்பாதி ராயுடு,  இளமை சாம் கரன்,  ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் வழக்கம் போல் இன்றும் சாதிக்க காத்திருக்கிறார்கள். புதுவரவு மொயீன் அலியும் அசத்துகிறார். ஆனால் பந்து வீச்சில்  சென்னையும்,  தோனி போலவே தடுமாறுகிறது. அதனால் 2வது போட்டிக்கான அணியில் கட்டாயம் மாற்றங்கள் இருக்கும். புது வேட்டி, வடை பாயசத்துடன் புத்தாண்டு கொண்டாடிய தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு இருக்காது. எப்படி இருந்தாலும்  கடந்த கால வரலாறுகளும், அனுபவங்களும் சென்னை சூப்பர் கிங்சுக்கு சாதகமாக இருக்கின்றன.  பஞ்சாப் கிங்சின் வேகமும், இளமையும் அதற்கு முட்டுக்கட்டை போடலாம்.   அதனால் வெற்றி‘கிங்’காக 2 அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும்.இதுவரை மோதியதில்....ஐபிஎல் தொடர்களில்  பஞ்சாப் கிங்ஸ-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதுவரை 23ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில்  சென்னை 14 ஆட்டங்களிலும், பஞ்சாப் 9 ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளன. கடைசியாக இந்த 2 அணிகளும் மோதிய 5 ஆட்டங்களில்  சென்னை4-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றன.  இந்த 2 அணிகளும் மோதிய ஆட்டங்களில் அதிகபட்சமாக சென்னை 240, பஞ்சாப் 231ரன்னும், குறைந்தபட்சமாக  சென்னை 120, பஞ்சாப் 92ரன்னும் எடுத்துள்ளன.

மூலக்கதை