ரூ.15 லட்சம் சம்பளத்தில் பீர் ருசி பார்க்க நாய் தேவை

தினமலர்  தினமலர்

பிரசல்ஸ்:'பீர் பானத்தை ருசி பார்த்து, அதன் தரத்தை தெரிவிக்கும் வேலைக்கு, 15 லட்சம் ரூபாய் சம்பளத்தில் நாய் தேவை' என, ஒரு நிறுவனம், பெல்ஜியம் நாட்டில் விளம்பரம் செய்துள்ளது.

ஐரோப்பாவின் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த, அனுஸர் - புச் என்ற மதுபான நிறுவனம், உலகப் புகழ் பெற்ற, 'பட்வெய்ஸர், கொரோனா' பீர் வகைகளை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம், கடந்த ஆண்டு, நாய்களுக்கு என, 'டாக் ப்ரூவ்' என்ற, 'ஆல்கஹால்' இல்லாத பிரத்யேக பீர் வகையை அறிமுகப் படுத்தியது. இதற்கு, பிரமாதமான வரவேற்பு கிடைத்தது. அறிமுக நாளில், அனைத்து பீர்களும் விற்றுத் தீர்ந்தன.இதையடுத்து, நாய்களுக்கு என, விதவிதமான பீர் தயாரிக்க, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, பீர் பானத்தை ருசி பார்த்து, தரத்தை தெரிவிக்கும் பணிக்கு, ஒரு நாயை அமர்த்த முடிவு செய்துள்ளது. இதையொட்டி, சமூக ஊடகங்களில், நாய் வேலைவாய்ப்பு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'ருசி பார்த்து சிறந்த பீரை தேர்வு செய்யும் நாய்க்கு, மாதம் 15 லட்சம் ரூபாய் சம்பளம், 60 ஆயிரம் ரூபாய்க்கு, மருத்துவ காப்பீட்டிற்கான, 'பிரிபெய்டு கார்டு' மற்றும் 40 'டாக் ப்ரூவ் டின் பீர்' ஆகியவை வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்து, நாய் வளர்ப்போர் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

மூலக்கதை