அமெரிக்க பார்லிமென்டில் அம்பேத்கருக்கு கவுரவம்

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்:இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம், அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கரின், 130வது பிறந்த நாள், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையில், அம்பேத்கரை கவுரவிக்க கோரும் தீர்மானத்தை, ஜனநாயக கட்சி உறுப்பினர் ரோ கன்னா தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைவருக்கும் சம உரிமை, மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதில், அம்பேத்கர் உறுதியாக இருந்தார். அவரது கொள்கை, இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.அம்பேத்கரை கவுரவித்து தீர்மானம் நிறைவேற்றுவதன் வாயிலாக, அவர் ஆற்றிய பணிகள் பற்றி, உலகில் உள்ள இளம் தலைவர்கள் தெரிந்து கொள்ள முடியும். உழைப்புகேற்ற ஊதியம், பெண் தொழிலாளர்களுக்கு சம உரிமை, அகவிலைப்படி உட்பட பல சீர்திருத்தங்களை, இந்தியாவின் அரசியல் சட்டத்தில் அவர் அறிமுகப்படுத்தி உள்ளார். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹிந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் ஆகியோர், 'பைசாகி' என்ற பெயரில் புத்தாண்டு கொண்டாடுகின்றனர்.பைசாகி விழா மற்றும் அதை கொண்டாடுபவர்களை அங்கீகரிக்க, பிரதிநிதிகள் சபையில், உறுப்பினர் ஜான் கரமென்டி, தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.

மூலக்கதை