ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகல்

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்,:''ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்க படைகள், செப்., 11க்குள் முழுமையாக விலக்கி கொள்ளப்படும்,'' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 2001ல், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும், அல் - குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின. அல் - குவைதா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டார்.

ஆனாலும், ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வந்ததால், அமெரிக்க படைகள், அங்கு தொடர்ந்து முகாமிட்டு வருகின்றன.இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை முழுமையாக விலக்கி கொள்வதாக, அமெரிக்க அதிபர், ஜோ பைடன் அறிவித்துள்ளார். முந்தைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், 'படைகள் விலக்கி கொள்ளப்படும் என, தொடர்ந்து கூறி வந்தார்.

இது தொடர்பாக, தலிபான்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்நிலையில், முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் ஜோ பைடன். அதன் பின், அவர் கூறியதாவது:அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய, அல் - குவைதா அமைப்பை ஒடுக்கி விட்டோம். அதன் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டார். ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்க படைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

ஆனால், தலைமுறை தலைமுறையாக நம் படைகள் அங்கு இருக்க முடியாது. அதனால், அமெரிக்காவில், செப்., 11ல் நடத்தப்பட்ட தாக்குதலின், 20ம் ஆண்டு நிறைவுக்குள், ஆப்கானிஸ்தானில் இருந்து, நம் படைகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படும். அவசரகதியில் இதை செய்யவில்லை. வரும், மே, 1 முதல் படிப்படியாக இந்த நடவடிக்கை இருக்கும். அதே நேரத்தில், பயங்கரவாதத்துக்கு எதிரான, அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடரும்.

ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுவதற்கு, அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள், குறிப்பாக பாகிஸ்தான் உதவ வேண்டும். மேலும், ரஷ்யா, சீனா, இந்தியா, துருக்கி போன்றவையும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆப்கானிஸ்தானில், தலிபான்களுக்கு எதிரான போரில், 20 ஆண்டுகளில், அமெரிக்க படைகளைச் சேர்ந்த, 2,450 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 20 ஆயிரத்து, 700 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்தியாவுக்கு கவலை

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுவதுமாக விலக்கி கொள்ளப்படுவது குறித்து, பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியுள்ளதாவது:கடந்த, 1990களில், பயங்கர வாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் இருந்தது. பல நாடுகளைச் சேர்ந்த பயங்கர வாதிகள் அங்கு பதுங்கியிருந்தனர். மேலும், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு பயற்சி அளிக்கப்பட்டது.

லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது போன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள், ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்று, இந்தியாவில் தாக்குதல் நடத்தின.தற்போது அமெரிக்கப் படைகள் விலக்கி கொள்ளப்படுவதால், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அதே நிலை உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது; இது, இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை