'விசா' கட்டுப்பாட்டை நீக்கலாமே: அமெரிக்க அமைப்பு வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்:'கல்விச் சேவைகள் துறையில், இந்தியா உடனான பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்க, அமெரிக்க அரசு, 'விசா' கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்' என, அந்நாட்டு வர்த்தக அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க - இந்திய கூட்டுறவு கூட்டமைப்பு, 2020ம் ஆண்டின், சர்வதேச மாணவர்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2019 - 20ம் கல்வி ஆண்டில், இந்தியாவில் இருந்து, ஒரு லட்சத்து, 93ஆயிரத்து, 124 மாணவர்கள் உயர் கல்வி கற்க, அமெரிக்கா வந்துள்ளனர். இது, முந்தைய கல்வி ஆண்டை விட, 4 சதவீதம் குறைவு என்ற போதிலும், அமெரிக்காவில் பயிலும் சர்வதேச மாணவர்களில், இந்தியா, 18 சதவீதத்துடன், இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்திய மாணவர்கள் மேலும் அதிக அளவில் உயர் கல்விக்காக அமெரிக்கா வர, விசா கட்டுப் பாடுகளை நீக்க வேண்டும். இதனால், இந்தியாவும், அமெரிக்காவும், கல்விச் சேவைகள் துறை சார்ந்த வர்த்தகம், முதலீடு ஆகியவற்றில் பயன் பெறும்.அமெரிக்கா, இந்தியா உடனான பரஸ்பர வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்க விரும்புகிறது. இதற்காக, ஏற்றுமதி மூலம், உள்நாட்டு வேலைவாய்ப்புகளை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்திய மாணவர்களும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வமாக ஈடுபட அமெரிக்கா வர விரும்புகின்றனர். இத்தகைய மாணவர்களுக்கு, ஓ.பி.டி., திட்டத்தில், படிப்பு முடிந்ததும், அமெரிக்காவில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, இந்திய மாணவர்கள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரிகின்றனர்.
எனவே, இந்திய மாணவர்கள் அதிக அளவில் வரும்பட்சத்தில், அது, அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உதவும். இதை கருத்தில் வைத்து, விசா மற்றும் குடியேற்ற கட்டுப்பாடுகளை நீக்க, அமெரிக்க அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை