நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம்: ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம்: ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது. பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. முதலாவது அலையைவிட இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வசித்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அவர்களுக்கான எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாததால், அவர்கள் ரயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலும் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர். இதற்கிடையே குடும்பம் குடும்பமாக பலர் கால்நடையாகவும், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களிலும் தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்பும் அவலம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே கொரோனா பரவல் அச்சம் காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் கொரோனா சூழலை ஆய்வு செய்வதற்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி காணொலி வழியாக கலந்துரையாடினர்.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ‘பத்து கோடி கொரோனா தடுப்பூசிகளை வேகமாக செலுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, புதிய தடுப்பூசி மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு போதிய அளவில் தடுப்பூசிகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும்’ என்றார்.

இந்நிலையில் இன்று காலை ‘வேர்ல்டோமீட்டர்’ வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, அனைத்து சாதனைகளையும் முறியடித்து ஒரு நாள் தொற்று பாதிப்பில் இந்தியா 2 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 739 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 70 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில் மிகமோசமாக பாதிப்புக்குள்ளான நாடாக உருவெடுத்துள்ளது.

அதேேபால் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டும் 58,952 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கடுத்த இடத்தில் 17,282 புதிய நோய்த்தொற்று பாதித்தவர்களுடன் டெல்லி உள்ளது. நாடு முழுவதும் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையின்படி பார்த்தால், மகாராஷ்டிரா (35,78,160), கேரளா (11,72,882), கர்நாடகா (10,94,912), தமிழ்நாடு (9,40,145), ஆந்திரபிரதேசம் (9,28,664) ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச பாதிப்புகள் உள்ளன.

இதற்கிைடயே தடுப்பூசி பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை, பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவு, கட்டுப்பாடுகளை மக்கள் மீறுதல், அரசுகளின் அலட்சியம் காரணமாக நாடு முழுவதும் மக்கள் பெரும்பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

30 லட்சத்தை நெருங்கும் பலி

உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,03,136 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13. 82 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 13,507 பேர் பலியாகியுள்ள நிலையில், ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 29 லட்சத்து 84 ஆயிரத்து 895 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது உலகெங்கும் 2 கோடியே 42 லட்சத்து 30 ஆயிரத்து 75 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா காரணமாக அதிகபட்சமாக அமெரிக்காவில் 5 லட்சத்து 78 ஆயிரத்து 86 பேர் இறந்துள்ளனர்.

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் அதிகம் பாதித்த நாடுகளாக உள்ளன.

.

மூலக்கதை