வெயில் வாட்டி வதைத்த நிலையில் சென்னையில் இடியுடன் திடீர் கனமழை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெயில் வாட்டி வதைத்த நிலையில் சென்னையில் இடியுடன் திடீர் கனமழை

சென்னை: சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடியுடன் திடீர் கனமழை பெய்தது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த இரு தினங்களாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

அந்தவகையில், வரும் 18ம் தேதி வரையில் தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி. நகர், கிண்டி, திருவான்மியூர், எழும்பூர், சென்ட்ரல், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை, கும்மிடிபூண்டி, தண்டையார்ப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, திருவொற்றியூர், மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், சேலையூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, திருப்போரூர், பெரம்பூர், வியாசர்பாடி, கொடுங்கையூர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், கூவத்தூர், ஊத்துக்கோட்டை, செங்கல்பட்டு பகுதிகளிலும் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது.

மயிலாப்பூர், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மரங்கள் சாய்ந்தன. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து சாய்ந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர். கடந்த சில நாட்களாகவே சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்தது.

இந்தநிலையில், சென்னையில் பெய்துள்ள கனமழையால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இன்று காலை 6 மணி நிலவரப்படி சென்னை நந்தனத்தில் 3. 8 செ. மீ, மீனம்பாக்கம், மேற்கு தாம்பரத்தில் தலா 2. 5 செ. மீ, எண்ணூரில் 2. 1 செ. மீ, நுங்கம்பாக்கத்தில் 2. 05 செ. மீ, மாதவரத்தில் 1. 3 செ. மீ மழை பதிவாகியுள்ளது.

.

மூலக்கதை