ஏப்.17ல் கூடுகிறது காங்., காரிய கமிட்டி

தினமலர்  தினமலர்
ஏப்.17ல் கூடுகிறது காங்., காரிய கமிட்டி

புதுடில்லி : கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து விவாதிக்க, காங்., காரிய கமிட்டி கூட்டம், வரும், 17ம் தேதி, டில்லியில் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நாட்டில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில், ஒரு லட்சத்து, 84ஆயிரத்து, 372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் ; 1,027 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 38 லட்சத்து,73ஆயிரம் ஆகவும், இறப்பு, ஒரு லட்சத்து,72ஆயிரம் ஆகவும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய, காங்., காரிய கமிட்டி கூட்டம், தலைவர், சோனியா தலைமையில், நாளை மறுநாள் நடைபெற உள்ளது.


இதில், காங்., தலைவர்கள், ராகுல், பிரியங்கா, சிதம்பரம், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி விநியோகத்தை விரிவுபடுத்தவும், பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்படும் என, தெரிகிறது. ஏற்கனவே, சோனியா, ராகுல் ஆகியோர், அனைவருக்கும் தடுப்பூசி வழங்க உத்தரவிடக் கோரி, பிரதமர், மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை